Header Ads



அரசியலுக்காகவே றிசானா பயன்படுத்தப்பட்டார் - தமிழ் தேசிய கூட்டமைப்பு


இலங்கை அரசு றிசானாவை தனது அரசியலுக்குப் பாவித்ததே தவிர, அவரின் விடுதலை தொடர்பில் உண்மையான அக்கறை செலுத்தவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

மிகவும் வறுமை நிலையிலுள்ள றிசானாவின் இழப்பு அந்தக் குடும்பத்துக்கு பேரிழப்பாகவுள்ளது. அவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முழுப் பொறுப்பையும் இலங்கை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரசு றிசானாவின் விடுதலை தொடர்பில் முறையான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. பல தடவைகள் இது தொடர்பில் அமைச்சர்கள் சவூதிக்கு சென்றுவந்த போதிலும் றிசானா பணியாற்றிய வீட்டு உரிமையாளர்களைச் சந்தித்து அவர்களை சமாதானப் படுத்தும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

அவ்வாறான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருந்தால் றிசானாவை காப்பாற்றியிருக்கலாம். றிசானாவைக் கொண்டு பிரசாரம் செய்யப்பட்டதேயொழிய அவரது விடுதலை தொடர்பில் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

றிசானா விடுதலை செய்யப்படப் போகின்றார் என்று மேற்கொள்ளப்பட்டு வந்த பிரசாரங்கள் காரணமாக அவரின் குடும்பம் சந்தோஷத்துடன் இருந்துவந்தது. இந்தநிலையில், மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை பேரதிர்ச்சியானதாகவே அமைந்திருக்கும். எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் முழுப்பொறுப்பையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.