Header Ads



சூடுபிடித்துள்ள ஞானசாரரின் சீருடை...


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையில் சாதாரணக் கைதிகளைப் போன்ற சீருடைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

அதேவேளை, ஞானசார தேரரின் சீருடையைக் கழற்ற வேண்டாமென்றும், அவரைத் தொடர்ந்து பீதாம்பரம் (சம்பிரதாயபூர்வமான சீருடை) அணிய அனுமதிக்க வேண்டுமென்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் சிரேஷ்ட பேராசிரியர், அனுநாயக்க மாநாயக்க தேரர் கொட்டப்பிட்டியே ராகுல தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுநாயக்க தேரர் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் பின்வருமாறு:

 

• சங்கசபையின் அனுமதி அவசியம்: பௌத்த மத மரபுகளின்படி, ஒரு பிக்குவின் சீருடையை (உடையைக்) கழற்றும் அதிகாரம், சம்பந்தப்பட்ட பிக்குவுக்கும் அவர் சார்ந்திருக்கும் மகா சங்கசபைக்கு மட்டுமே உண்டு.

 

• நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிப்பு: ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பையோ அல்லது அதன் மேலாதிக்கத்தையோ சங்கம் எதிர்க்கவில்லை. எனினும், சிறையில் பிக்குவின் உடை அகற்றப்பட்டது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

 

• ஒழுக்காற்று விசாரணை: ஞானசார தேரர் மீதான குற்றச்சாட்டுக்கள் எவையும் விநயப் பீடகத்தின்படி ‘பாராஜிக’ குற்றமாகவோ அல்லது சீருடையைக் கழற்றும் அளவுக்கு தீவிரமான குற்றமாகவோ சங்கம் முன்பு தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து விசாரித்து முடிவு எடுப்பது சம்பந்தப்பட்ட சங்கசபையின் பொறுப்பாகும்.

 

• கைதி உடை மற்றும் பதிவுகள்: இதற்கிடையில், நீதிமன்ற அவமதிப்புத் தீர்ப்பைத் தொடர்ந்து ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஆறு வருட சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் சாதாரணக் கைதியாகப் பதிவு செய்யப்பட்டு, சீருடை மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், செயற்பாடுகளுக்கான சிறைச்சாலை ஆணையாளருமான செனக பல்லேகென்ன தெரிவித்தார்.


தற்பொழுது ஞானசார தேரரின் சீருடை விவகாரமானது, நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் தண்டனை நிறைவேற்றப்படும் நிலையுடன் சேர்த்து சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.