புதிய தீவிரவாத குழு, சம்பிக்கவை உடனடியாக விசாரிக்கவும்
கடந்த 29.09.2026 அன்று ஊடக சந்திப்பொன்றில் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க அவர்கள் "சஹ்ரானின் தீவிரவாத குழுவின் தலைமைப் பொறுப்பை கல்முனையை சேர்ந்த புதிய ஒருவர் பொறுப்பெடுத்திருப்பதாகவும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுதலையானவர்கள் குறித்த குழுவில் இணைந்திருப்பதாகவும்" தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே இலங்கையில் முஸ்லிம்களை இலக்குவைத்து போலி சமூக வலைதளப் பக்கங்களினூடாக திட்டமிட்ட வகையில் இனவாதப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் சம்பிக்க ரணவக்கவின் பாரதூரமான இக் கருத்துக்கள் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றிய கதையாக அமைந்துவிடக்கூடாது.
ஆகவே அரசாங்கம் உடனடியாக சம்பிக்க ரணவக்கவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம். சம்பிக்க ரணவக்க கூறிய கருத்துக்கள் உண்மை எனின் அதுகுறித்த விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, அவ்வாறான குழுக்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அக்கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனில் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.
- சமூக நீதிக் கட்சி
- 03.10.2026

Post a Comment