Header Ads



அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களை, குற்றம்சுமத்தும் சவேந்திர சில்வா


இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் தாய்நாட்டுக்காகவே போரிட்டதாகவும் தெரிவித்தார்.


2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் தனது 58 ஆவது படைப்பிரிவு 123,000 க்கும் அதிகமான பொதுமக்களை மீட்டதாகவும், சரணடைந்த சுமார் 12,000 புலிகள் உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் குறிப்பிட்டார்.


புலிகளின் வட பிராந்திய சிரேஷ்ட தளபதி ஒருவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், சீருடை அணியாத போராளிகள் கொல்லப்படும் போது அவர்கள் பொதுமக்களாகக் கணக்கிடப்படும் சூழல் நிலவுவதாகக் கூறினார்.


அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறக் காரணம் என அவர் விமர்சித்தார். 

No comments

Powered by Blogger.