ராஜபக்ஷ குடும்பத்தை இம்ரான் கானுடன் ஒப்பிட முடியுமா..?
ராஜபக்ஷ குடும்பத்தை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடனோ அல்லது தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுடனோ ஒப்பிட முடியாது என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர் பெரேரா சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் புதன்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாமல் ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரப்போவதாக கூறப்படுகின்றது. அதேவேளை, தனக்கும் இம்ரான் கானுக்கும் நெல்சன் மண்டேலாவுக்கும் ஏற்பட்ட நிலைமை ஏற்படலாம் என அவர் கூறியதாக நான் பார்த்தேன். ஆனால், இம்ரான் கானையும் நெல்சன் மண்டேலாவையும் ராஜபக்ஷ குடும்பத்துடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது.
நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க மக்களின் உரிமைகளுக்காகவும் இனவெறிக்கு எதிராகவும் போராடியவர். அவர் நாட்டை கொள்ளையடித்து பொருளாதாரத்தை சீரழித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக்குச் செல்லவில்லை. எனவே, அவரது வரலாற்றை ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் வரலாற்றுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது என்றார்.

Post a Comment