நாமலை சென்றடைந்த 100 மில்லியன் ரூபா
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நாமல் ராஜபக்ச மற்றும் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கு கோட்டை நீதவான் பிரசன்ன அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ச சிறைச்சாலை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்போது, விசாரணைகளின் அறிக்கைகள் ஏற்கனவே சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டார சமர்ப்பித்த அறிக்கையின்படி, பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இடையே 16 விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் சிறையில் வைத்து சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தனி விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போதைய வழக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் பணமோசடி குறித்து விசாரிக்க அதிகாரம் கிடைத்துள்ளதால், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இணைந்து இந்த விசாரணையை நடத்தி வருகின்றன.
தொழிலதிபர் நிமல் பெரேரா வழங்கிய சத்தியக்கடதாசியின் மூலம், இந்த பரிவர்த்தனைக்காக நாமல் ராஜபக்ச 800,000 அமெரிக்க டொலர்களை (சுமார் 100 மில்லியன் ரூபா) இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
எயார்பஸ் நிறுவனம் வழங்கிய 1.454 மில்லியன் யூரோ இலஞ்சப் பணம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலியின் சிங்கப்பூர் கணக்கிற்கு மாற்றப்பட்டு, பின்னர் நிமல் பெரேராவின் நிறுவன கணக்கிற்கு அனுப்பப்பட்டு, இறுதியாக நாமல் ராஜபக்சவைச் சென்றடைந்துள்ளது.
மேலும், பிரியங்காவின் கணக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷமீந்திர ராஜபக்சவின் கணக்கிற்கு 160,400 யூரோ அனுப்பப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச உதவிகளுடன் நடத்தப்பட்ட தடயவியல் விசாரணையின் போது, நாமல் ராஜபக்சவிற்கும் எயார்பஸ் அதிகாரிகளுக்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்களும் மீட்கப்பட்டுள்ளன.
முதலாவது சந்தேகநபர் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டாவது சந்தேகநபர் அவுஸ்திரேலியாவிலும், மூன்றாவது சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ச அமெரிக்காவிலும் தலைமறைவாக உள்ளனர்.
மேலும், சாட்சிகள் உயிருக்கு பயந்து சாட்சியமளிக்க அஞ்சுகின்றனர் என்பதால் நாமலுக்கு பிணை வழங்க அரசு தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

Post a Comment