Header Ads



மகாராஷ்டிராவில் ஆச்சரியமான சம்பவம்

 


மகாராஷ்டிராவின் நாந்தேடில் கடந்த 13-ஆம் தேதி ஓர் ஆச்சரியமான  சம்பவம் நடந்தது.


மராத்வாடா பகுதியில் தொடர்ந்து நிலவி வந்த கடும் வறட்சியும் மழைப் பற்றாக்குறையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் விவசாயிகளையும் பெரிதும் பாதித்திருந்தன. விவசாயப் பயிர்கள் அனைத்தும் காய்ந்து கருகின. குடிநீரின்றி மனிதர்களும் விலங்குகளும் பெரிதும் அவதியுற்றனர்.


இந்தச் சூழ்நிலையில்தான், அப்பகுதியின் இமாமும் பிரபல இஸ்லாமிய அறிஞருமான மௌலானா சஅத் அப்துல்லாஹ் நத்வி, இந்தத் துயரத்திலிருந்து நிவாரணம் பெற மழைக்கான தொழுகையை நிறைவேற்றுமாறு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை அனைவரும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டனர்.


 நாந்தேடில் உள்ள கித்வாய் நகரில் அமைந்த படி ஈத்கா மைதானத்தில், மழையை வேண்டி தொழும் சிறப்பு தொழுகை (ஸலாத்துல் இஸ்திஸ்கா) நடத்த முடிவு செய்யப்பட்டது.


ஈத் பண்டிகை நாட்களை நினைவூட்டும் வகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பிரார்த்தனைக்காக மைதானத்திற்குத் திரண்டு வந்தனர்.


முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தொழுகைக்கு வரும்போது மக்கள் தங்கள் வீட்டுப் செல்லப் பிராணிகளையும் மைதானத்திற்கு அழைத்து வந்தனர். ஆடுகள், பூனைகள், நாய்கள் என அனைத்தும் மைதானத்தை வந்தடைந்தன. சில காணொளிகளில் குதிரைகளையும் காண முடிந்தது.


 முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அகிலத்தைப் படைத்த இறைவனிடம் தங்களுக்கு மன்னிப்பு வழங்கி, அருண்மழையைப் பொழியுமாறு உளமாரப் பிரார்த்தித்தனர்.


தொழுகைக்குப் பிறகு மௌலானா செய்த பிரார்த்தனையில் ஈத்கா மைதானமே கண்ணீரில் மூழ்கியது. பாவமன்னிப்பிற்காக விம்மி அழுது, கைகளை ஏந்தி மக்கள் அல்லாஹ்விடம் உருக்கமாக வேண்டினர். ஒவ்வொருவரும் எவ்வளவு வேதனையுடன் அழுது கொண்டிருந்தனர் என்பது காணொளிகளில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. ஈத்காவின் சூழல் முழுவதுமே உணர்ச்சிமயமானதாக மாறியது.


வாயில்லாப் பிராணிகளின், பிஞ்சு குழந்தைகளின் தாகத்தையும் துயரத்தையும் படைத்தவன் முன் வைத்து, விம்மி அழுதபடி செய்யப்பட்ட அந்தப் பிரார்த்தனை அனைவரின் கண்களையும் குளமாக்கியது.


அவர்கள் அவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோதே, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் வானம் திடீரென இருண்டது.

பிரார்த்தனை முடிந்து மக்கள் மைதானத்தை விட்டுப் பிரிந்து செல்லும் முன்பே, மண்ணையும் மக்களின் மனங்களையும் குளிர்விக்கும் வகையில் பலத்த மழை பொழிந்தது.


காய்ந்து வறண்ட நிலத்திலும் மனித மனங்களிலும் ஓர் அற்புதம் போலப் பொழிந்த மழைத்துளிகள், அங்கிருந்தவர்களைப் பெருமளவு பரவசத்தில் ஆழ்த்தின. 


கண்ணீர் மல்கிய பிரார்த்தனைகள் உடனடியாக நன்றியுணர்வுடன் கூடிய ஸஜ்தாக்களாக (சிரவணக்கம்) மாறின. ஊர் முழுதும் மகிழ்ச்சியால் திளைத்தது.

இறைவன் முன் செய்யப்படும் தூய்மையான பிரார்த்தனைகளைப் படைத்தவன் நிராகரிக்க மாட்டான் என்பதற்கு நாந்தேடில் நடந்த இச்சம்பவம் ஒரு மிகப்பெரிய நினைவூட்டலாகும்.


✍️ ரஹ்மத்துல்லாஹ் மஃரிபி 

No comments

Powered by Blogger.