நேபாள வெள்ளத்தில் அந்த பச்சை வீடு மாத்திரம் தப்பியது எப்படி..?
சத்ர பஹதூர் பியாகுரேல் என்பவர்தான் நேபாள பெருவெள்ளத்தைத் தாக்குப்பிடித்த அந்த வியத்தகு வீட்டின் உரிமையாளர். 67 வயதான சத்ர பஹதூர் பியாகுரேல் அளித்த ஊடகப் பேட்டியில், “அத்தனை பெரிய வெள்ளப் பெருக்கை பார்த்தபோது உயிர் பிழைப்போமா என்றுகூட எங்களுக்குத் தெரியவில்லை. நேரம் செல்லச் செல்ல இனி செய்வதற்கு ஒன்றுமில்லை எனத் தோன்றியது. இனி கடவுள்தான் நாங்கள் பிழைக்க வேண்டுமா, மூழ்க வேண்டுமா என்பதை முடிவு செய்வார் என்ற முடிவுக்கு வந்தோம்.
எனது ஒரே கவலைமெல்லாம் நாங்கள் குடும்பத்தோடு உயிரிழந்துவிட்டால் பள்ளிக்குச் சென்றிருந்த எனது பேரனின் நிலை என்னவாகும் என்பதாகவே இருந்தது. வீட்டின் தரைத்தளம் 1995-ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போது எனக்கொரு மளிகைக் கடை இருந்தது. பின்னர் மதுபான மொத்த விற்பனை தொழிலையும் மேற்கொண்ட போது அடுத்தடுத்த தளங்களைக் கட்டினேன்.
வீடு கட்டும்போது அஸ்திவாரத் தூண்கள் பலமாக அமைக்கப்பட்டன, அதனால் கூட வெள்ளத்தில் என் வீடு தப்பியிருந்திருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி இறையருள் நிறைவாக இருந்தது என்பேன்.
இப்போதைக்கு காத்மாண்டுவுக்கு இடம் பெயர்ந்துள்ளோம். வீட்டின் மொத்த சேதத்தையும் இன்னும் மதிப்பீடு செய்து கொண்டுதான் இருக்கிறோம். பாஸ்போர்ட், வீட்டின் பத்திரங்கள், ஆதார் அட்டை உள்பட பல ஆவணங்களை இழந்து நிற்கிறோம்.
ஆனால், எல்லோரும் உயிருடன் இருக்கிறோம். என் பேரனும் ஒரு நாளைக்குப் பின்னர் எங்களுடன் இணைந்துவிட்டான். அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்றார்..

Post a Comment