Header Ads



அனோஜன் விடுதலை செய்யப்பட வேண்டும் - மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ்


இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்த தற்போது சவூதி அரேபியாவில் வசிக்கும் சிவராசா அனோஜன் அவர்களின் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு தொடர்பில் சவூதி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பிடப்படும் மரண தண்டனை விவகாரம் தொடர்பில் அனைவரதும் கவனத்தை ஈர்க்கின்றேன்.


சகோதரர் சிவராசா அனோஜன் அவர்களது குற்றம் தொடர்பில் நாம் பேசுவதை விட மனிதாபிமான அடிப்படையில் மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் புனித இஸ்லாமிய சமயத்தின் பிரதிநிதியாகவும், யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டணையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திலான கோரிக்கையோடு யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் ஒன்றித்து உடன்படுவதோடு, அவரின் விடுதலையை முஸ்லிம் சமூகமாக நாமும் வலியுறுத்துகின்றோம்.


மேலும் அனோஜனின் விவகாரத்தில் எங்களுக்கு இரண்டு முக்கியமான பொறுப்புகள் இருக்கின்றன என்று கருதுகின்றேன்.


முதலாவது, அனோஜனின் விவகாரத்தை அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு அப்பால் “மனிதாபிமான அடிப்படையில் அணுகி, அவரது உயிரைப் பாதுகாப்பதற்கும் விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தேவையான அனைத்து சட்ட, இராஜதந்திர மற்றும் சர்வதேச முயற்சிகளையும் மேற்கொள்வது”


இரண்டாவது, இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி “இனங்களுக்கிடையில் முரண்பாடுகளையும் வெறுப்பையும் தூண்ட முயற்சிப்பவர்களின் செயற்பாடுகளிலிருந்து மக்களையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது”


இவை இரண்டுமே மிகுந்த பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் அணுகப்பட வேண்டிய கடினமான பணிகளாகும். “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதும், அதேவேளை சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும்” என்றும் நான் முழுமையாக நம்புகின்றேன்.


என்.எம்.அப்துல்லாஹ்

உறுப்பினர்

யாழ்ப்பாணம் மாநகர சபை

No comments

Powered by Blogger.