அபூ ரிகாலைவிட, பெரிய துரோகி
யார் இந்த அபூ ரிகால்..?
துரோகத்தின் சின்னமாக அறியப்பட்ட அரேபியன். எந்தவொரு அரபு துரோகிக்கும் 'அபூ ரிகால்’ என்ற பட்டம் சூட்டப்படும் அளவிற்கு துரோகி.
இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு, ஹஜ் யாத்திரையின்போது, அபூ ரிகாலின் கல்லறை மீது கல் எறியும் சடங்கை அரபுகள் பின்பற்றிவந்தனர். இந்த வழக்கம் இஸ்லாத்தின் வருகை வரை நீடித்தது.
துரோகத்தின் கதை:
கஅபாவை அழிக்க நாடி அபிசீனியாவில் இருந்து புறப்பட்ட அப்ரஹாவின் யானைப் படைக்கு மக்காவுக்குச் செல்லும் வழி தெரியவில்லை.
எந்த அரபியரைக் கேட்டாலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒருவரும் சொல்லவில்லை, மறுத்துவிட்டனர்.
ஆனால் அபூ ரிகால் மட்டும் சொந்த மக்களுக்கு துரோகம் செய்ய முடிவெடுத்தான். முன் நின்று வழிநடத்தி யானைப் படையை மக்காவுக்கு அழைத்து வந்தான்.
அதனால் மரணத்திற்குப் பின்னர் அவனது செயலுக்காக அவமானகரமான முறையில் அவன் தண்டிக்கப்பட்டான். ஆம், அவனது மண்ணறையைக் கடந்து செல்லும் அனைவரும் அதில் கல் எறிந்தனர்.
இதனால் அரபுப் பாரம்பரியத்தில் துரோகத்தின் சின்னமாகவே அபூ ரிகால் வெறுப்புடன் நினைவுகூரப்பட்டான்.
வாரிசு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக மனைவியை மணவிலக்கு செய்ய நாடிய ஒருவரிடம் உமர் (ரலி) கூறினார்:
"மரியாதையாக உன் மனைவியை திரும்ப அழைத்துக்கொள்! இல்லையேல்.. அபூ ரிகாலின் மண்ணறை மீது மக்கள் கல்லால் அடிப்பது போன்று, உனது மண்ணறையையும் கல்லால் அடிக்க உத்தரவிடுவேன்”
(அல்பிதாயா வந்நிஹாயா-இப்னு கஸீர்)
இன்று சிலர் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் செய்யும் துரோகத்தை நினைத்தால்…
அன்றைய அரேபியர்கள் இன்று திரும்பி வந்தால் இவர்களுடைய மண்ணறைகள் மீதுதான் முதல் கல்லை எறிவார்கள்.
ஏனெனில், இவர்கள் அபூ ரிகாலை விடவும் மோசமான துரோகிகள்!
✍️ நூஹ் மஹ்ழரி

Post a Comment