Header Ads



இப்படியும் ஏமாற்றுகிறார்கள்


கொழும்பில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைக் திருடிச் சென்ற கபுவா என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நபர் நுகேகொட பிரிவுக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் அவ்வாறு மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 40 பவுனுக்கும் அதிகமான தங்க ஆபரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.


வீடு மற்றும் காணிகள் விற்பனைக்கு உள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும் பெண்களை இலக்கு வைத்து சந்தேக நபர் நீண்ட காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.


மிரிஹான பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது காணி மற்றும் வீடு விற்பனைக்கு உள்ளதாக பத்திரிகையில் பல தடவைகள் விளம்பரம் செய்திருந்தார்.


அது தொடர்பில் கவனம் செலுத்திய சந்தேக நபர், குறித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துள்ளார்.


தொலைதூரப் பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயம் ஒன்றின் பெயரைக் கூறி, அத்தேவாலயத்தில் நீண்டகாலமாக கபுவாவாக செயற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


அந்த பெண்ணின் வீடும் காணியும் நீண்ட காலமாக விற்பனை செய்யப்படாமல் இருப்பது தனக்குத் தெய்வீக பலத்தால் புலப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அக்காணியை விரைவாக விற்பனை செய்வதற்குச் சடங்கு ஒன்றைச் செய்து தர முடியும் என அந்த பெண்ணிடம் சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சந்தேக நபரின் பேச்சுத் திறமையால் ஏமாற்றப்பட்ட பெண், குறித்த நபரை வீட்டிற்கு அழைத்து விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.


இதன் போது அவர் அதற்காக 5 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அதற்குச் சம்மதம் தெரிவித்த பெண், அதற்காகத் திகதி ஒன்றையும் சந்தேக நபரிடம் ஒதுக்கிச் சடங்கிற்கான அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்ததாக குறித்த பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.


ஒப்புக்கொண்டதற்கமைய, வீட்டிற்கு வந்திருந்த சந்தேக நபர், தான் வழங்கிய பொருட்களின் பட்டியலிலிருந்த சிறிய பானைக்குள் வீட்டின் தங்க ஆபரணங்களில் ஏதேனும் 3 அல்லது 7யை போட்டு, சிவப்பு அல்லது வெள்ளை நிறமான அடிமட்டம் போன்ற நீளமான துணியுடன் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.


அதன் பின்னர் அந்தப் பெண் முன்னிலையிலேயே அதனை நன்றாக மறைத்து, தாம்பூலம் மற்றும் மலர்களால் பூசை செய்யத் தயாரிக்கப்பட்டிருந்த மலர் மேடையில் வைத்து சில மணிநேரங்கள் சடங்கு செய்துள்ளார்.


21 நாட்கள் கடந்ததன் பின்னர் வீட்டிலும் காணியிலும் புனித நீர் தெளித்து, 21ஆவது நாளில் பானைக்குள் போடப்பட்ட தங்க ஆபரணங்களை எடுக்குமாறு அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.


அதிலிருந்து 14 நாட்கள் செல்லும்போது நிலத்தைக் கொள்வனவு செய்வதற்காகக் வாங்குபவர் நிச்சயமாக வருவார் எனத் தெரிவித்துள்ளார்.


வாக்குறுதியளித்த பணத்தையும் பெற்றுக்கொண்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர் கூறியவாறே வீட்டுச் சொந்தக்காரரான பெண் செயல்பட்ட போதிலும், புதைக்கப்பட்ட பானையைத் தோண்டி எடுத்தபோது அதற்குள் இருந்த தங்க ஆபரணங்கள் இருக்கவில்லை.


அத்துடன் வீட்டை கொள்வனவு செய்வதற்காக யாரும் வரவும் இல்லை. பின்னர் இது தொடர்பில் அப்பெண் மிரிஹான பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது, இது போன்றதொரு சம்பவம் தொடர்பான முறைப்பாட்டு வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலும் பதிவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.


அதன் பின்னர் குறித்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


குறித்த சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இவ்வாறு மோசடியாக பெறப்பட்ட அனைத்துத் தங்க ஆபரணங்களையும் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.


இதனை அடுத்து, அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.