Header Ads



PCOS உள்ள பெண்களுக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

 


கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட மகப்பேறியல் மற்றும் பெண்நோயியல் துறைப் பேராசிரியரும், டி சோய்சா மகளிர் மருத்துவமனையின் பேராசிரியர்கள் பிரிவைச் சேர்ந்தவருமான பேராசிரியர் முகமது ரிஷார்ட், தனது மாணவர் ஜி.ஏ.ஆர். லக்ஷனுடன் (PCOS - Polycystic Ovary Syndrome) பாதிப்புடன் வாழும் பெண்களின் உடற்பயிற்சி மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பை ஆராயும் ஆய்வு ஒன்றை 'பிஎம்சி வுமன்ஸ் ஹெல்த் ' (BMC Women's Health) என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.


PCOS என்பது இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான ஹார்மோன் கோளாறு ஆகும். இது ஒழுங்கற்ற மாதவிடாய், கர்ப்பம் தரிப்பதில் சிரமம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் தேவையற்ற முடி வளர்ச்சி ()போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். மேலும், இது பெண்களின் அன்றாட நல்வாழ்வையும் (Quality of Life) அடிக்கடி பாதிக்கின்றது. ஆராய்ச்சிக் குழுவினர் கொழும்பில் உள்ள டி சோய்சா மகளிர் மருத்துவமனை மற்றும் காசல் வீதி மகளிர் மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளின் கருவுறுதல் சிகிச்சை மையங்களுக்கு வருகை தந்த PCOS பாதிப்புள்ள 85 பெண்களிடம் ஆய்வு நடத்தினர். இதில் அவர்களின் உடற்பயிற்சி செயல்பாடுகள் மற்றும் PCOS அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது மதிப்பீடு செய்யப்பட்டது.


ஆய்வில் பங்கேற்ற பத்து பெண்களில் சுமார் ஆறு பேர், பரிந்துரைக்கப்பட்ட அளவுக்குப் போதுமான உடற்பயிற்சியில் ஈடுபடவில்லை என்பது கண்டறியப்பட்டது. மேலும், பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கைத் தரம் மிதமான அளவில் குறைந்துள்ளதாகத் தெரிவித்தனர் ; குறிப்பாக உடல் முடி, தோற்றம் மற்றும் உடல் எடை தொடர்பான கவலைகள் தங்களை அதிகம் பாதிப்பதாகக் குறிப்பிட்டனர். அதேசமயம், அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள், சிறந்த ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம், மேம்பட்ட உணர்வுபூர்வமான நல்வாழ்வு, உடல் எடை தொடர்பான குறைவான கவலைகள் மற்றும் குழந்தைபேரின்மை தொடர்பான குறைந்த அளவிலான மன உளைச்சல் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.


இக்கண்டுபிடிப்புகள், PCOS பாதிப்புள்ள பெண்கள் அதிக அளவில் உடற்பயிற்சிகளில் ஈடுபட உதவுவது, இலங்கையில் உள்ள கருவுறுதல் சிகிச்சை மையங்களுக்கு ஒரு எளிய மற்றும் குறைந்த செலவிலான வழியாக இருக்கும் என்பதைக் காட்டுகின்றன. இதன் மூலம், அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகளுடன் இணைந்து நோயாளிகளின் நல்வாழ்வையும் மேம்படுத்த முடியும்.


இந்த ஆய்வு, PCOS பாதிப்புள்ள பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமே போதுமானதல்ல, அதையும் தாண்டி உடற்பயிற்சியில் பெண்களின் ஈடுபாடும் தேவை என்பதை நினைவூட்டும் சரியான நேரத்திலான ஒரு விழிப்புணர்வாகும். வழக்கமான உடற்பயிற்சியை ஊக்குவிப்பது, அவர்களின் உடல் மற்றும் உணர்வுபூர்வமான நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு எளிய சிக்கனமான மற்றும் நடைமுறைக்கேற்ற வழியாக அமைவதோடு, இலங்கையில் பெண்களுக்கான முழுமையான ஆரோக்கியப் பராமரிப்பு அணுகுமுறையை முன்நோக்கி கொண்டு செல்லவும் உதவும்.

No comments

Powered by Blogger.