Header Ads



எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் பற்றி ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கவும்


எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பான பிரேரணையைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக் கோரி சபாநாயகரிடம் கையெழுத்துடனான கோரிக்கை கடிதம் சமர்ப்பிப்பு!


திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபினால் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட, கொவிட் காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் பிரேரணையைப், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயும்படி கோரி 20 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் இன்று (19.08.2026) சபாநாயகர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டது.


திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து இந்தக் கோரிக்கை கடிதத்தைக் கையளித்தனர்.


முன்னாள் அரசாங்கத்தின் காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறி, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளுக்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட இந்த மனித உரிமை மீறல் மற்றும் அநீதி தொடர்பில் முறையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இக்கோரிக்கை கடிதம் வலியுறுத்துகிறது.


வெளியீடு:

ஊடகப் பிரிவு,

இம்ரான் மகரூப் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம். 

No comments

Powered by Blogger.