7 கோடி பெறுமதியான 1,044 கிலோ கஞ்சா பிடிபட்டது
மொனராகலை - அம்பேகமுவ, கொமகல வீதியின் முனையில் உள்ள மவுஆர எல கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கிருந்து 1044 கிலோகிராம் 180 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையின் பெறுமதி சுமார் 7 கோடியே 37 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அப்பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்ட பொலிஸார், 54,096 கஞ்சா செடிகளுடன் மற்றுமொரு நபரை கைது செய்துள்ளனர்.
வலானை ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹன ஓலுகலவின் அறிவுறுத்தலின் பேரில், அதன் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment