Header Ads



முஸ்லிம்களுக்கு எந்த அரசாங்கத்திலும் இப்படி நடைபெறவில்லை..

 
(எம்.ஆர்.எம்.வசீம்)


எல்லை நிர்ணய ஆணைக்குழுவில்  முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் முக்கிய பதவிகளுக்கு முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களில் முஸ்லிம் பிரநிதித்தும் இல்லாமல் இருப்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கான மூன்று  உறுப்பினர்கள் கடந்த 24.ஆம் திகதி  நியமிக்கப்பட்டார்கள். அரசியலமைப்பு போரவையினாலே இந்த உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு பெயரிடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அதில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை.


புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு  தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் சமன்சிறி ரத்நாயக்க, எம்.பி. ராேஹன புஷ்பகுமார மற்றும் கே. தவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தமிழர் மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ள அதேநேரம் பெரும்பான்மை சமூகத்தைச்சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த யாரும் நியமிக்கப்படவில்லை.


சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூன்று பிரதான இனங்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் இவ்வாறான எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு ஓர் சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு உறுப்பினரை நியமித்திருக்க வேண்டும். அதுதான் முறையாகும்.


ஏனெனில்  உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாணசபை தேர்தல்களின்போது  எல்லை நிர்ணயம் முக்கியமாகும். சில பிரதேச எல்லைகளில் இருந்து பல் உறுப்பினர்கள் தெரிவாகும் நிலை இருக்கிறது.


அவ்வாறான சந்தர்ப்பங்களில் தான்சார்ந்த சமூகத்தின் பிரதிநிதித்துவம் தொடர்பில் எடுத்துரைப்பதற்கு, அந்த சமூகத்தைச் சேர்ந்த  ஒருவர் இருப்பது கட்டாயமாகும். அதனால்  எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள இந்த குறையை போக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அத்துடன் இந்த அரசாங்கத்தில் அரசின் முக்கியமான பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் விடயத்தில் தொடர்ந்தும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளார்கள்.


அரசாங்கத்தின் அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை.  இதுதொடர்பில் பலரும் அரசாங்கத்துக்கு எடுத்துக்கூறியபோதும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாமலே இருந்து வருகிறது.


அதேபோன்று அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்தின்போதும் முஸ்லிம்கள் யாரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.  பின்னர் அதுதொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தபோதே முஸ்லிம் ஒருவர் அமைச்சின்  செயலாளராக நியமிக்கப்பட்டார்.


இவ்வாறு முஸ்லிம் சமுகத்துக்கான அனைத்து உரிமைகளையும் இந்த அரசாங்கத்திடம் போராடி பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே இருந்து வருகிறது. இதற்கு முன்னர் எந்தவோரு அரசாங்கத்திலும் முஸ்லிம்கள்  புறக்கணிக்கப்படவில்லை என்றார்.

No comments

Powered by Blogger.