Header Ads



முதன்முறையாக இலங்கையில் அபூர்வ சத்திர சிகிச்சை வெற்றி


கண்டி, பேராதனை வைத்தியசாலையில் இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்து வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு மட்டும் இருந்த 2 சிறுநீரகங்களில் ஒன்றைப் பிரித்தெடுத்து, மற்றைய குழந்தைக்கு வெற்றிகரமாக மாற்றும் சத்திரசிகிச்சையும் இதன் போது மேற்கொள்ளப்பட்டது.

உலக வரலாற்றில் முதன்முறையாக சத்திர சிகிச்சை  

இவ்வாறான ஒரு சத்திரசிகிச்சை உலகிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணரும், பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் மாதுல ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


மாவனெல்ல தாயொருவருக்கு 2021 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் இந்த இரட்டையர்கள் பிறந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அதற்கமைய சிறுநீரகங்களின் செயற்பாடு சீரானது.


இந்த நிலையை அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 10 ஆம் திகதி இவர்கள் பிரித்தெடுக்கும் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.


சத்திரசிகிச்சைக்காக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நீண்ட நேரம் குழந்தைகள் மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். குழந்தைகளின் இதயம், நுரையீரல், இரத்த ஓட்டம் மற்றும் மூளை ஆகியவற்றின் சீரான செயற்பாடே இந்த வெற்றிகரமான சத்திரசிகிச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக மயக்க மருந்து நிபுணர் அஷானி ரத்நாயக்க, குறிப்பிட்டார். 


இந்தச் சத்திரசிகிச்சைக்காக 15 விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் இணைந்து பணியாற்றியுள்ளனர். குழந்தைகள் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், எதிர்காலத்தில் அவர்களுக்கு மேலும் சில சத்திரசிகிச்சைகள் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் வைத்தியர் மாதுல ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.