ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,025 வாகனங்கள் ஏல விற்பனை
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு, இதுவரை உரிமையாளர்களால் பொறுப்பேற்கப்பட்டு விடுவிக்கப்படாத சுமார் 1,025 வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விலைமனுக்கோரல் முறையில் விற்பனை செய்வதற்கு சுங்கத்திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவற்றில் சுமார் 625 வாகனங்கள் துறைமுகத்தை வந்தடைந்து 6 மாதங்களுக்கும் அதிகமான காலம் கடந்துள்ளதாகச் சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்கள் எந்தவிதமான சுங்க விதிமீறல்களுக்கும் உட்பட்டவை அல்ல என்றும், இறக்குமதியாளர்கள் அவற்றை உரிய காலத்தில் விடுவிக்கத் தவறியதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏலம் அல்லது விலைமனுக்கோரல் மூலம் பெறப்படும் தொகையிலிருந்து முதலில் அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வரிகள் அறவிடப்படும். எஞ்சிய தொகையிலிருந்து துறைமுக மற்றும் சேமிப்புக் கிடங்கு கட்டணங்கள் ஈடுசெய்யப்படும். அதன் பின்னரும் எஞ்சும் மீதிப் பணம் சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்குத் திருப்பி அளிக்கப்படும்.

Post a Comment