Header Ads



100 வருட பழமையான பள்ளிவாசலை திறக்க அவசர நடவடிக்கை எடுக்கப்படும்


மஹர சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள  பள்ளிவாசலுக்கு தேசிய ஒருமைப்பாட்டு பிரதி  அமைச்சர்  முனீர் முலப்பர் இன்று (14) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

 

 முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தப்  பள்ளிவாசல்  நிர்மாணிக்கப்பட்டது. மஹர சிறைச்சாலையைச் சுற்றி வசிக்கும் முஸ்லிம் சமூகத்தின் மத நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்ட இந்தப் பள்ளிவாசல், பாதுகாப்பு காரணங்களுக்காக 2019 முதல் மூடப்பட்டுள்ளது.


இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும்  சுமார்  300 முஸ்லிம் குடும்பங்களுக்கு தமது மதஅனுஸ்டானங்களை மேற்கொள்ள அருகாமையில் வேறு பள்ளிவால் இல்லாத நிலையில் சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள  இந்தப் பள்ளிவாசலில் தங்கள் மத நடவடிக்கைகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


இந்த நிலையில்   சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கிராம மக்களுடன் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து  பிரதி அமைச்சர் கலந்துரையாடல் நடத்தினார்.


கடந்த அரசாங்கங்களுக்கும்  இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதற்கான தேவையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் வலியுறுத்திய கிராம மக்கள், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாட பிரதி அமைச்சர் மேற்கொண்ட இந்த முயற்சியை பாராட்டினர்.


சிறைச்சாலைக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முஸ்லிம் சமூகத்தினர் இந்தப் பள்ளிவாசலுக்குள் தங்கள் மத அனுஸ்டானங்களை மேற்கொள்ள வாய்ப்பு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி பிரச்சினையைத் தீர்க்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் இங்கு தெரிவித்தார்.


கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரகீத் மதுரங்க, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் குழு இந்த கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.