Header Ads



"இந்த குழந்தையை வளர்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்" - ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை கதை இது


"இந்த குழந்தை சமூகத்தில் தாக்கு பிடிப்பது என்பது கடினமான காரியம், இந்த குழந்தை நீண்ட நாள் உயிர் வாழ முடியாது என்று என்னை பற்றி சொன்னார்கள். ஆனால் இன்று எனக்கு 23 வயதாகிறது. நான் எம்.காம் முதலாம் ஆண்டு படிக்கிறேன். 3 வருடங்களாக தொழில்முறையாக பாட்டு கற்றுக் கொள்கிறேன். வருங்காலத்தில் ஒரு நாள் பாடகியாக இந்த சமூகத்தின் முன் வந்து நிற்பேன்," என உள்ளத்தில் இருந்து உறுதியோடு கூறுகிறார் மதுரையை சேர்ந்த பார்கவி.


மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்த 23 வயதான பார்கவி, பிறக்கும் போதே Collodian மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரை மருத்துவர்கள் Collodian Baby என்று அழைக்கிறார்கள்.


Collodian மரபணு குறைபாடு காரணமாக பார்கவிக்கு சிறுவயதில் இருந்தே தினமும் உடலில் தோல் உரிந்து கொண்டே இருக்கும். மீண்டும் தோல் வளர தொடங்கும். இது தினமும் நிகழ்வதால் பார்கவிக்கு எப்போதுமே உடல் முழுவதும் தோல் உரிந்து கொண்டே இருக்கும். அதுவும் வெயிலில் நீண்ட நேரம் சென்றால் தோலில் இருந்து ரத்தம் வரத் தொடங்கும்.


பார்கவிக்கு Collodian குறைபாடு எலும்பு வரை தாக்கி இருப்பதால் அவரால் வேகமாக எழுதவோ, வேகமாக நடக்கவோ முடியாது.ஆனால் பார்கவியின் குரலில் அவர் பாடும் பாடல் நம் காதில் தேனாய் ஒலிக்கிறது. பாடகி ஆக வேண்டும் என்பதற்காக தினமும் பல்வேறு பாடல்களை பாடிப் பயிற்சிகளை மேற்கொள்கிறார் பார்கவி.


"எனக்கு பிறக்கும் போதே மரபணு குறையாடு காரணமாக தோல் உரிந்து கொண்டே இருக்கும். சிறு வயதில் இருந்தே இதற்கு பல மருத்துவ சிகிச்சை எடுக்க தொடங்கினோம். அலோபதி, ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி என நாங்கள் பார்க்காத மருத்துவர்கள் கிடையாது. இது மரபணு குறைபாடு என்பதால் முழுமையான தீர்வு இல்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்."


"முகத்திற்கு வேண்டுமானால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆனால் எங்களுக்கு அவ்வளவு வசதி இல்லாததால் அதை மேற்கொள்ள முடியவில்லை.சிறுவயதில் எனக்கு அதிக அளவில் தாழ்வு மனப்பான்மை இருந்தது. எங்கும் வெளியே செல்ல மாட்டேன். வீட்டிற்கு யாராவது வந்தால் கூட அவர்களிடம் பேச மாட்டேன். பொது இடங்களுக்கு எங்குமே செல்ல மாட்டேன்."


"என்னை பற்றி யாராவது பேசுவார்கள், கிண்டல் செய்வார்கள் என எனக்குள்ளே அந்த எண்ணம் வேரூன்றி இருந்தது. அதனால் ஒரு கட்டத்தில் சோர்வாகி விட்டேன். அதன் பிறகு யோசித்து பார்த்ததில் ஒரு விஷயம் புலப்பட்டது.எனக்கு இந்த உருவம் தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. இனி யார் என்ன பேசினால் என்ன நம்முடைய கல்வியில் கவனம் செலுத்துவோம் என நினைத்து என அனைத்து ஆற்றலையும் கல்வியின் பக்கம் திருப்பி விட்டேன்" என புன்னகைக்கிறார் பார்கவி.


பார்கவிக்கு சிறுவயது முதலே மரபணு குறையாடு இருப்பதால் இவரை பள்ளியில் சேர்ப்பதற்காக இவரது பெற்றோர் பெரும் பாடுபட்டிருக்கிறார்கள். பல பள்ளிகளில் இவருடைய உருவத்திற்காகவே அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார்கள்.


உங்கள் குழந்தையை நாங்கள் பள்ளியில் சேர்க்க மாட்டோம், அப்படி சேர்த்தால் மற்ற பிள்ளைகளும் பாதிக்கப்படுவார்கள் என கூறி பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் பார்கவி கல்வி கற்க வேண்டும் என இவரது பெற்றோர்கள் உறுதியாக நின்றதால் அவர்களுடைய தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது.இறுதியாக திருப்பாலையில் உள்ள அரசுப்பள்ளியில் 1 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டார் பார்கவி.


" எனக்கு பள்ளியில் இடம் கிடைத்தது என்றவுடன் என் பெற்றோருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொடக்கத்தில் இருந்தே திருப்பாலை அரசு பள்ளி ஆசிரியர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர். எனக்கு Collodian மரபணு குறைபாடு எலும்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் என்னால் வேகமாக எழுதவோ, நடக்கவோ முடியாது.


அதனால் அந்த பள்ளி ஆசிரியர்கள், நான் மெதுவாக கல்வி கற்க பெரிதும் துணை நின்றனர். கல்வியிலும், விளையாட்டிலும் என்னை எந்த விஷயத்திற்கும் அவர்கள் வற்புறுத்தவில்லை. இதனால் எனக்கு கல்வியின் மீது மேலும் ஆர்வம் அதிகரித்தது. சில நேரங்களில் வெயில் அதிகமாக இருந்ததால் எனக்கு அதிக அளவு வியர்வை சுரக்கும். என்னால் இயல்பாக துடைக்க முடியாது. அதனால் என் ஆசிரியர்கள் எனக்கு விசிறி வைத்து விசிறி விடுவார்கள் " என நெகிழ்ச்சியோடு கூறுகிறார் பார்கவி.


ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை திருப்பாலை அரசு பள்ளியில் படித்த பார்கவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஸ்கிரைப் துணை கொண்டு எழுதி வெற்றிகரமாக தேர்ச்சி அடைந்தார். பின்னர் ஸ்ரீராம் நல்லமணி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி அடைந்து, EMG யாதவா பெண்கள் கல்லூரியில் பி.காம் இளங்கலை பட்டம் பெற்று,இப்போது யாதவா கல்லூரியில் எம். காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.


சிறு வயதில் இருந்தே பாடகி ஆக வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்திருக்கிறது. அப்போது சில நாட்கள் அவர் பாட்டு வகுப்பிற்கும் சென்றிருக்கிறார். ஆனால் மீண்டும் அதை தொடர முடியவில்லை. பின்னர் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு பாடல் போட்டிகளில் பங்கேற்று பாடியிருக்கிறார். அதில் பலவற்றில் பரிசுகளும் வென்றிருக்கிறார். இவர் பெற்ற இந்த பரிசுகள் வீட்டின் முகப்பை அலங்கரித்து கொண்டிருக்கிறது. இவர் பெற்ற பரிசுகள் பாடல் பாடுவது மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியிருக்கிறது.


"பல்வேறு போட்டிகளில் பாடல் பாடி பெற்ற பரிசுகளால் எனக்கு பாடகி ஆக வேண்டும் என்ற ஆசை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் பாடகி ஆக வேண்டும் என்றால் அதை தொழில்முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதை என் பெற்றோர்களிடமும் தெரிவித்தேன். அவர்கள் எனக்காக பாடல் வகுப்புகளை தேடினார்கள்.


பிறகு என்னை பாட்டு வகுப்புகளில் சேர்த்துவிட்டார்கள். கடந்த 3 வருடங்களாக நான் தொழில்முறையாக பாடல் வகுப்புகளில் சேர்ந்து நுணுக்கங்களை கற்றுக் கொண்டு இருக்கிறேன். அதேப் போல எனக்கு ரேடியோ ஜாக்கியாக ஆக வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இதற்காக சில அலுவலகங்களுக்கு கூட வாய்ப்பு கேட்டு சென்றேன். ஆனால் எங்கிருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை. என பார்கவி சொல்லும் போது அவருடைய கண்களில் வருத்தம் கூடியது.


ரேடியோ ஜாக்கி ஆக வேண்டும் என்ற ஆசை காரணமாக தினமும் யூடியூப்பில் பேல வீடியோக்களை பார்த்து அது போலவே பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் பார்கவி. கல்லூரி முடித்துவிட்டு வந்ததும், பாடல் வகுப்புகளுக்கு சென்று விட்டு, அதன் பிறகு ரேடியோ ஜாக்கிக்காக பயிற்சியும் எடுத்துவிட்டு அதன் பின்னர் கல்லூரி அசைன்மெண்டுகளையும் முடித்து விட்டு தூங்க செல்கிறார். தன்னுடைய கனவை நிறைவேற்ற தினமும் அதற்கான நேரத்தையும் உழைப்பையும் செலவிடுகிறார்கள்.


பார்கவியின் அத்தனை செயல்களுக்கு துணை நிற்பது அவருடைய குடும்பத்தினர் தான். இவருடைய பெற்றோர் கூடுதல் அக்கறை எடுத்து தன் மகளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள்.


" நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும் தான் படித்திருக்கிறேன். எனக்கு அதிகமாக படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் என்னால் படிக்க முடியவில்லை. பார்கவி பிறக்கும் போதே அவளுக்கு மரபணு குறைபாடு இருந்தது முதலில் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.


என் உறவினர்கள் எல்லாம் , இந்த குழந்தையை எப்படி வளர்க்க போகிறாய் , உன்னால் இது முடியுமா என எங்களை நோக்கி கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் நாங்கள் பெற்ற குழந்தையை நாங்கள் தானே கூடுதலாக கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள முடியும். நானும் என் கணவரும் யார் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இன்று வரை எங்கள் மகளுக்காக, அவள் விரும்பும் அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். குறிப்பாக அவள் நிறைய படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.


ஏனென்றால் ஒரு பெண்ணிற்கு படிப்பும், சொந்த காலில் நின்று சுயமாக சம்பாதிப்பதும் வாழ்க்கையில் கூடுதல் பலத்தை கொடுக்கும். என்னுடைய அனுபவத்தில் அதை நிறைய பார்த்திருக்கிறேன். அதனால் பார்கவி எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்பதை நிறுத்தி விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்கிறார் பார்கவியின் தாய் புவனேஸ்வரி.


தன்னுடைய மகளின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவருடைய தாய் புவனேஸ்வரி கூடுதல் கவனம் செலுத்துகிறார். பார்கவியால் பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்த முடியாது. அதனால் அவருடைய தாய், இரண்டு சக்கர வாகம் ஓட்டக் கற்றுக் கொண்டு தன்னுடைய பெண்ணை பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்காக காலை மாலை என இருவேளையும் தானே வண்டியில் அழைத்து சென்று விட்டு விட்டு, திரும்ப கூட்டி வருகிறார். அதே போல பார்கவியின் அப்பத்தாவும் தன்னுடைய பேத்திக்கு எப்போதும் கல்வி கற்பதிலும், பாடல் கற்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள்.


"நான் பிறக்கும் போதே என்னை ஏளனம் செய்தவர்கள், இன்று நான் கல்லூரி படிப்பதை ஆச்சர்யமாகவும், சாதனையாகவும் பார்க்கிறார்கள். ஆனால் அதற்கு பின் இருக்கும் வலி மற்றும் வேதனைகளை நாளும் என் குடும்பத்தினர் மட்டும் தான் அறிவார்கள். வாழ்க்கை எப்போதும் நமக்கு பிடித்த மாதிரி இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது. ஆனால் நமக்கு எந்த வாழ்க்கை கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதை வைத்து நம்மால் என்ன சாதிக்க முடியுமோ அதை செய்ய வேண்டும்.


வாழ்க்கையில் நீங்கள் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் உங்கள் தன்னம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது. இந்த குழந்தையை வளர்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். இந்த குழந்தை சமூகத்தில் தாக்கு பிடிப்பது என்பது கடினமான காரியம்.


இந்த குழந்தை நீண்ட நாள் உயிர் வாழ முடியாது என்று என்னை பற்றி சுற்றி இருப்பவர்கள் சொன்னார்கள். ஆனால் இன்று எனக்கு 23 வயதாகிறது. நான் எம்.காம் முதலாம் ஆண்டு படிக்கிறேன். 3 வருடங்களாக தொழில்முறையாக பாட்டு கற்றுக் கொள்கிறேன். வருங்காலத்தில் ஒரு நாள் பாடகியாக இந்த சமூகத்தின் முன் வந்து நிற்பேன். எனக்கு வரும் பிரச்சனைகளையும் என்னுடைய தன்னம்பிகையால் முறியடிப்பேன் என தீர்க்கமாக சொல்லி முடித்தார் பார்கவி.




No comments

Powered by Blogger.