ருஷ்தியின் கைது, மனித உரிமை மீறல் - நஷ்டயீடு செலுத்த மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை
கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சிட்டி சென்டர் எனும் பிரபல வர்த்தக கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள ஸ்பா சலூன் எனும் வர்த்தக நிலையத்தில் சேவையாற்றிய குறித்த இளைஞனை கடந்த மார்ச் 22 ஆம் திகதி அந்த வர்த்தக நிலையத்துக்குள் வைத்து கைது செய்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு, 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்த பின்னர் எந்த குற்றச்சாட்டும் சுமத்தாமல் விடுவித்தது. குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாத போதும் ருஷ்தி பல்வேறு நிபந்தனைகளின் கீழ் மத்தியிலேயே அத்தனகல்ல நீதிவான் முன் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 13 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் எல்.ரி.பி. தெஹிதெனிய தலைமையில் அதன் உறுப்பினர்களான சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, பேராசிரியர் பாத்திமா பர்சானா ஹனீபா, பேராசிரியர் தையமுத்து தனராஜ், கலாநிதி கிஹான் குணதில ஆகிய ஐவர் கொண்ட ஆணையாளர் குழு, ருஷ்தியின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவித்து பல்வேறு பரிந்துரைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கும் அரசுக்கும் அளித்துள்ளது.
அதன்படி “பிரதிவாதிகள் (பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட ஐவர்) தங்கள் நிர்வாக நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்டவரின் (ருஷ்தியின்) அரசியலமைப்பின் 14(1)(a), 10, 13(1), 13(2), 13(5), 14(1)(h), 14(1)(g), 12(1) மற்றும் 12(2) ஆகிய உறுப்புரைகள் ஊடாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான, அதாவது கருத்து சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், மனசாட்சி மற்றும் மத சுதந்திரம், தன்னிச்சையான கைதில் இருந்து விடுபடுவதற்கான மற்றும் தடுப்புக்காவலில் இருந்து விடுபடுவதற்கான சுதந்திரம், நிரபராதி என்று கருதும் உரிமை, நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் பயணம் செய்ய முடியுமான சுதந்திரம், சட்டபூர்வமான ஒரு வேலையில் ஈடுபடும் சுதந்திரம், பாகுபாடு காட்டப்படாது சமத்துவமாக நடாத்தப்படுவதை உறுதி செய்வதற்கான உரிமைகளை மீறியுள்ளனர்’ என மனித உரிமைகள் ஆணைக் குழு தீர்மானித்துள்ளது.
ருஷ்தியை விடுவிக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:
ருஷ்தி தற்போது வசிக்கும் …….. நிட்டம்புவ எனும் முகவரியில் வசிக்க வேண்டும்.
வீட்டிலிருந்து வெளியேறும் போதும் மீள வீட்டுக்கு வரும் போதும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.
சிலவேளை நிரந்தர வதிவிடத்தை மாற்றுவதானால் அது குறித்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.
வெளிநாடு செல்ல விரும்பினால், அது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரின் அனுமதியை பெற வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை, கொழும்பு கோட்டையில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் ஆஜராக வேண்டும்.
அழைப்பொன்று கிடைக்கும் பட்சத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி முன்னிலையில் 72 மணி நேரத்துக்குள் ஆஜராக வேண்டும்.
நீதிமன்ற அறிவித்தல் கிடைத்தால் உடனடியாக அதன்படி மன்றில் ஆஜராக வேண்டும்.
அடிப்படைவாத, பயங்கரவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள், தனி நபர்களுடனான நடவடிக்கைகள் தொடர்புகளில் இருந்து தவிர்ந்திருத்தல் வேண்டும்.
இந்த நிபந்தனைகளின் கீழேயே ருஷ்தி இருந்து வரும் நிலையில், ருஷ்தியின் சார்பில் அவரது பெற்றோரும், மனித உரிமைகள் ஆணைக் குழு சுயாதீனமாகவும் முன்னெடுத்த விசாரணைகளின் முடிவில் பின்வருமாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆணைக் குழுவின் முடிவு:
“இந்த முறைப்பாட்டின் விடயங்கள் மற்றும் சூழ்நிலைகளை ஆராய்ந்ததன் பின்னர், பாதிக்கப்பட்டவரின் (ருஷ்தியின்) அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பிரதிவாதிகளும் ஒரு நிறுவனம் என்ற ரீதியில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என ஆணைக் குழு கருதுகிறது. ஆணைக் குழுவின் பார்வையில், அந்த மீறல்களுக்கு தனிப்பட்ட அதிகாரிகளின் செயல்களை மட்டும் காரணம் காட்ட முடியாது. எனினும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் நிறுவன மட்ட மற்றும் கொள்கை ரீதியிலான குறைபாடுகள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தவறான விளக்கங்கள் இந்த உரிமை மீறலுக்கு நேரடியாக செல்வாக்கு செலுத்தியுள்ளது.” என ஆணைக் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு 30 பக்க நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அதனூடாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு பணிப்பாளர், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு தனித்தனி பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.
பின்னணி:
உண்மையில் ருஷ்தி பலஸ்தீனுக்கு ஆதரவாக அல்லது இஸ்ரேலுக்கு எதிராக ‘பக் இஸ்ரேல்’ எனும் ஸ்டிக்கரை ஒட்டியமையை மையப்படுத்தி கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் நாம் முன்னர் இரு சந்தர்ப்பங்களில் விரிவாக எழுதியிருந்தோம். கைது தொடர்பில் சி.ரி.ஐ.டி. முறையாக அவ்விளைஞனின் பெற்றோருக்கு அறிவித்திருக்காத நிலையில் 24 மணி நேரத்தின் பின்னரேயே தொலைபேசியில் அழைத்து, கடந்த மார்ச் 23 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு பெற்றோருக்கு அறிவித்துள்ளனர்.
அதன் பின்னர் விசாரணைக்கு சென்ற பெற்றோரை விசாரித்த பின்னர் அவர்களை ஜீப்பில் ஏற்றி, நிட்டம்புவ பகுதியில் உள்ள அவர்களது வீட்டுக்கு அழைத்து வந்து வீட்டை முற்றாக சோதனை செய்துள்ளனர்.
இப்படித்தான் இவ்விசாரணைகள் ஆரம்பமானது. அதன் பின்னர் இது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இருந்து தடுப்புக் காவல் உத்தரவை (MOD/LEG/PTA/21/2025) பெற்றுக்கொண்டுள்ள சி.ரி.ஐ.டி. யினர் அதன் பிரகாரம் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரித்தனர்.
இதனிடையே, இந்த கைது விவகாரம் பொது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய பின்னர், குழப்பமடைந்த சி.ரி.ஐ.டி.யினர் குறித்த இளைஞனை சி.ரி.ஐ.டி.யினர் எவ்வாறாயினும் ஏதேனும் குற்றச்சாட்டு ஒன்றுக்குள் தள்ள பல முயற்சிகளை முன்னெடுத்தனர். இதனைவிட, பெற்றோர் நீதிமன்ற, ஏனைய நிவாரணங்களை பெறுவதை தவிர்ப்பதற்காக பல்வேறு அச்சுறுத்தல்கள் பொய் வாக்குறுதிகளையும் கொடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு முன்னெடுத்த விசாரணையின் முடிவில் இது குறித்த அத்தனை விடயங்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அவ்வாணைக் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை பார்க்கும் போது அது தெளிவாகிறது.
இதில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கு 9 பரிந்துரைகளையும் பதில் பொலிஸ் மா அதிபருக்கு 2 பரிந்துரைகளையும் முன் வைத்துள்ள ஆணைக் குழு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும் பரிந்துரைகளை முன்வைத்து, ருஷ்திக்கு 2 இலட்சம் ரூபா நட்ட ஈடு செலுத்துமாறும் அறிவித்துள்ளது.
பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கான பரிந்துரைகள்:
1. பயங்கரவாதத் தடை சட்டத்தின் பிரிவு 11(1) ஆல் அனுமதிக்கப்படாததால், கடந்த 2025 ஏப்ரல் 7 அன்று பாதிக்கப்பட்டவருக்கு (ருஷ்திக்கு) எதிராக பிறப்பிக்கப்பட்ட விடுவிப்பு நிபந்தனைகளை தளர்த்துவதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு உடனடியாக பரிந்துரைக்க வேண்டும்.
2. பயங்கரவாதத் தடை சட்டத்தின் பிரிவு 2(1)(h) இன் கீழ் ஒரு குற்றத்திற்காக அல்லது கருத்துக்களை வெளிப்படுத்துவது தொடர்பான குற்றச்சாட்டில் எந்தவொரு சந்தேக நபரையும் கைது செய்வதற்கு முன்பு பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து ஆலோசனை பெறுவதற்கான நடைமுறை ஒன்றை நிறுவுதல்.
3. இலங்கை அரசியலமைப்பின் 13(2) உறுப்புரையின் படி, கைது செய்யப்பட்ட ஒருவரை 72 மணி நேரத்திற்குள் நீதிவான் முன் ஆஜர்படுத்துவதற்கான நிலையான நடைமுறையை நிறுவுதல்
4. இந்தச் சம்பவம் தொடர்பான ஆணைக் குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளின் நகலை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும். அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படல் வேண்டும்.
5. ஒருவரை கைது செய்ததும், அதே நாளில் அச்சந்தேக நபரின் நெருங்கிய உறவினர்களுக்கு கைது பற்றுச் சீட்டை வழங்க எழுத்துபூர்வ, தெளிவான அறிவுறுத்தல்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு வழங்குதல்.
6. பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அனைத்து அதிகாரிகளும், பொலிஸ் நிலையம் போன்ற உத்தியோகபூர்வ இடத்தைத் தவிர வேறு எந்த இடங்களில் வைத்தும், சந்தேக நபர் ஒருவரின் நெருங்கிய உறவினர்களைச் சந்திப்பதையோ அல்லது தொடர்பு கொள்வதையோ தவிர்க்குமாறு எழுத்துபூர்வ, தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குதல் வேண்டும்.
7. கடந்த 2022 பெப்ரவரி 14 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட RTM CRTM- 231 எனும் இலக்கத்தை உடைய சுற்று நிருபம் பத்திரிகை மற்றும் வானொலிக்கு தகவல்களை வழங்குதல் குறித்த இலங்கை பொலிஸாரின் எண். D5 எனும் கட்டளை ஆகியவற்றை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு மீண்டும் விநியோகிக்கவும். மேலும் சந்தேக நபர் அல்லது விசாரணைகள் பற்றிய பாரபட்சமான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறு அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் உத்தரவிடவும்.
8. ‘இன அடையாளங்களை’ வெளிப்படுத்துவதை தவிர்க்கவும், சந்தேக நபரின் இன, மத பின்னணியை விசாரணைகளின் போது அநியாயமாக கருத்திற்கொள்வதை தவிர்க்குமாறும் நியாயத்தை மட்டும் கருத்தில் கொண்டு விசாரணை செய்யுமாறும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் அதிகாரிகளுக்கு தெளிவான, எழுத்து மூல ஆலோசனைகளை வழங்குதல்
9. சந்தேக நபரின் ‘மன நிலை’ அல்லது பிற உளவியல் காரணிகள் விசாரணையுடன் தொடர்புடையதாக இருந்தால், விசாரணையைத் தொடர்வதற்கு முன்பு குற்றவியல் உளவியல், மனநல மருத்துவம் அல்லது இதே போன்ற துறையில் பயிற்சி பெற்ற ஒரு சுயாதீன நிபுணரிடமிருந்து அறிக்கை பெறப்பட வேண்டும் என பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அனைத்து அதிகாரிகளுக்கும் எழுத்துபூர்வ, தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குதல். ஏதேனும் மனநலப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டால், சந்தேக நபர் உடனடியாக ஒரு சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதிக்கப்பட வேண்டும். அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி பரிந்துரைத்தால், சந்தேக நபர் தேவையான சிகிச்சைக்காக பொருத்தமான நிறுவனத்தின் பராமரிப்பில் வைக்கப்பட வேண்டும்.
பதில் பொலிஸ் மா அதிபருக்கான பரிந்துரைகள் :
1. பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும்போது ‘நியாயமான சந்தேகம்’ என்ற தரநிலை குறித்து சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து தெளிவான வழிகாட்டுதல்களை நிறுவ வேண்டும். அத்தகைய வழிகாட்டுதல்கள் கடந்த 2019 ஜூலை 2 ஆம் திகதி அப்போதைய பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதல்களுடன் முழுமையாக ஒத்துப்போக வேண்டும். அத்தகைய வழிகாட்டுதல்கள் குறித்து பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு தேவையான பயிற்சியை வழங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்கப்படல் வேண்டும்.
2. மேற்கண்ட பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்த முதல் பிரதிவாதிக்கு (பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்) தேவையான ஆலோசனைகளை வழங்கவும்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கான பரிந்துரை:
சட்டபூர்வமான வேலையில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் மீறப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்டவருக்கு (ருஷ்திக்கு) ஏற்பட்ட பாரபட்சத்தை நிவர்த்தி செய்யும் வகையில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கூட்டுப் பொறுப்பை மையப்படுத்தி பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பாதிக்கப்பட்டவருக்கு (ருஷ்திக்கு) இரண்டு லட்சம் ரூபா (ரூ.200,000/-) தொகையை வழங்க பரிந்துரைக்கப்படுகிறது.
மனித உரிமைகள் ஆணைக் குழு சட்டத்தின் 15(7) ஆம் அத்தியாயம் படி, 2025 ஜூலை 15 அல்லது அதற்கு முன்னர் இந்த அனைத்து பரிந்துரைகளையும் அமுல் செய்யுமாறும், இந்த பரிந்துரைகளை அமுல் செய்வது குறித்த விடயங்களை ஆணைக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் முதல் பிரதிவாதிக்கும் (பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பணிப்பாளர்), பதில் பொலிஸ்மா அதிபருக்கும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும் உத்தரவு
இந்த அவதனிப்புக்கள், பரிந்துரைகளின் பிரதிகள், கடந்த 2025 ஏப்ரல் 7 ஆம் திகதி ருஷ்திக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்துவது உள்ளிட்ட பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், சட்ட மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்புதல்.- Vidivelli
Post a Comment