Header Ads



சொந்த மக்கள் மீதே விமான தாக்குதல்: 55 பேர் பலி - மியான்மரில் சம்பவம் (படங்கள் இணைப்பு)


மியான்மரில் நீடிக்கும் உள்நாட்டுப் போரில் ராணுவம் நடத்திய விமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 53 பேர் கொல்லப்பட்டதாக அந்த தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் கூறுகின்றனர்.


உயிரிழந்தவர்களில் 15 பெண்கள் உள்பட பல சிறுவர்களும் அடக்கம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பிபிசியால் தனிப்பட்ட முறையில் அந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை.


மியான்மரின் வடமேற்கு சாகெய்ங் பிராந்தியத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமம் ஒன்றை குறிவைத்து செவ்வாய்க்கிழமை விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


2021-ம் ஆண்டு பிப்ரவரியில் ஆட்சியைப் பிடித்த பிறகு எதிர்ப்பாளர்கள் மீது ராணுவ ஆட்சியாளர்கள் விமான தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.


சாகெய்ங் பிராந்தியத்தில் வாழும் மக்கள் ராணுவ ஆட்சியைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். கிளர்ச்சிக் குழுக்களை அமைத்துக் கொண்டுள்ள அந்த மக்கள், தாங்களே பள்ளிகள், மருத்துவமனைகளை சொந்தமாக நடத்துகின்றனர்.


பிபிசியிடம் பேசிய கிராமவாசி ஒருவர், உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு பறந்து வந்த ராணுவ விமானம் ஒன்று குண்டு வீசியதாகவும், அதனைத் தொடர்ந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் சுமார் 20 நிமிடங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.


கிராமத்தில் பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிவதையும், உயிரிழந்தவர்களின் உடல்கள் தரையில் சிதறிக் கிடப்பதையும் சிலர் வீடியோவாக இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.


சிதறிக் கிடக்கும் துணிகள், எரிந்த மோட்டார் சைக்கிள்களுக்கு நடுவே உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களும் கிடப்பதால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை துல்லியமாக எண்ண முடியவில்லை என்று அவர்கள் கூறியுளள்னர்.


பா ஸி கிய் என்ற அந்த கிராமத்தினர், அண்மையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள மக்கள் தற்காப்புப் படை (PDF) என்ற கிளர்ச்சிக் குழு அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.


தன்னார்வலர்களைக் கொண்ட மக்கள் தற்காப்புப் படையினர், மியான்மரின் பல்வேறு இடங்களில் ராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.


மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதர் வொல்கர் துர்க், சர்வதேச சட்டங்களை மீறி நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் சம்பவம் அச்சமூட்டுவதாக இருப்பதாக கூறியுள்ளார்.


"நான் முன்பே கூறியபடி, 2021-ம் ஆண்டு பிப்ரவரிக்குப் பின்னர் மியான்மர் ராணுவமும், அதன் ஆதரவுக் குழுக்களும் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


ஐ.நா. தகவல்படி, மியான்மர் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்; சுமார் 14 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்; மியான்மரின் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.


ரஷ்யாவும், சீனாவும் வழங்கிய போர் விமானங்களைக் கொண்டே, கிளர்ச்சிக் குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏனெனில், சாலை மார்க்கமாக செல்ல முயலும் போது கிளர்ச்சிக் குழுக்கள் ஆங்காங்கே வைக்கும் கண்ணி வெடிகளுக்கு ராணுவத்தினர் இலக்காக நேரிடுகிறது. மியான்மர் ராணுவத்தின் விமான தாக்குதலால், எதிர் தரப்பில் படையினர் அல்லாத அப்பாவி பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுகின்றனர்.


2021-ம் ஆண்டு பிப்ரவரி முதல் கடந்த ஜனவரி மாதம் முடிய மியான்மர் ராணுவம் குறைந்தது 600 விமான தாக்குதல்களை நடத்தியிருப்பதாக, சண்டை நடக்கும் இடங்கள் மற்றும் நிகழ்வுகள் தரவுகளை (ACLED) பிபிசி ஆய்வு செய்த போது தெரியவந்தது.


ராணுவப் புரட்சிக்குப் பின்னர், மியான்மருக்கு வெளியே அமைக்கப்பட்ட, அந்நாட்டின் ஒருங்கிணைந்த தேசிய அரசு, 2021 அக்டோபர் முதல் 2022 செப்டம்பர் வரையிலான ஓராண்டில் மட்டும் இதுபோன்ற தாக்குதல்களில் 155 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.


பா ஸி கிய் கிராமத்தில் ராணுவ தாக்குதலில் 55 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அதுவே மியான்மர் உள்நாட்டுப் போரில் ஒரு தாக்குதலில் நேரிட்ட அதிகபட்ச உயிரிழப்பாக இருக்கும்.




No comments

Powered by Blogger.