Header Ads



நாட்டில் அதிகமான பெண்கள், தொழில் செய்ய தூண்டப்படுவதாக ஆய்வில் கண்டுபிடிப்பு


பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கட்டுப்படியாகாததும் மற்றும் நம்பகமற்றதாகப் பார்க்கப்படுவதுமான, முறையான குழந்தைப் பராமரிப்பு (பகல் பராமரிப்பு) ஒழுங்குவிதிகள் இலங்கையில் இல்லாமை நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்புக்கு பெரும் இடையூறாக உள்ளது என்று வெளிப்படுத்தப்பட்டது.


இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே தலைமையில் நேற்று (09) கூடிய போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.


தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக அதிகமான பெண்கள் தொழில் செய்வதற்கு தூண்டப்படுவதாக வெரிட்டே ஆய்வு நிறுவனம் குழுவில் தெரிவித்தது. எவ்வாறாயினும், நுழைவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் மற்றும் பாலின உணர்திறன் பெருநிறுவன கொள்கைகள் இல்லாமை, கடுமையான பாலின விதிமுறைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆதரவுக்கு மேலதிகமாக துணையின் ஆதரவு இல்லாமை ஆகியவை பெண்களை தொழிலாளர் சக்தியில் பங்கேற்கும் திறனில் இருந்து தடுக்கின்றன என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.


குழந்தைப் பராமரிப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது கட்டாயமானது என குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே சுட்டிக்காட்டினார். இதேவேளை, ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றம் (WFD) மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (CPA) ஆகியன குழுவில் முன்வைத்த சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் நியாயமற்ற பாகுபாடுகளைத் தடுத்தல் சட்டமூலம் பற்றியும் விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டது.


முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் பரந்தவையாக இருப்பதால், குறித்த சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது குழுவின் கருத்தாக இருந்தது.


மேலும், பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பது பற்றிய சட்டமூலம், பாலின சமத்துவ சட்டமூலம் மற்றும் பெண்களை வலுவூட்டுவது பற்றிய சட்டமூலம் தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.


அதற்கமைய, குறித்த சட்டமூலங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, 2023 சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் பற்றிய தேசிய கொள்கையை எதிர்வரும் மார்ச் 08 ஆம் திகதி வெளியிடுவதற்கும் குழு இணங்கியது.


(பேராசிரியர்) ஜி.எல். பீரிஸ், எரான் விக்ரமரட்ன, ரஜிகா விக்ரமசிங்க, மஞ்சுளா திசாநாயக்க, முதிதா பிரசாந்தி, பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.