Header Ads



அமெரிக்காவிலும், கனடாவிலும் பனிப்பொழிவின் பிடியில் சிக்கியுள்ள 25 கோடி மக்கள்


வட அமெரிக்காவில் வீசும் பனிப் புயலால் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 25 கோடி பேர் பனிப்பொழிவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இதனால் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.


கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மோசமான கிறிஸ்துமஸ் குளிர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட வேறு ஊர்களுக்கு சாலை மற்றும் வான் வழியாக பயணிக்கும் கோடிக் கணக்கானவர்களின் பயணம் தடைபட்டுள்ளது.


சுமார் 20 கோடி மக்களுக்கும் மேல் வாழும், பாதிக்கும் மேலான அமெரிக்க மாகாணங்களுக்கு தீவிர வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மட்டும் ஆயிரக் கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெக்சாஸ் முதல் க்விபெக் வரையில் சுமார் 3,200 கி.மீ. வரையிலும் பனிப்புயல் வீசுகிறது. வளிமண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் எழுந்த பனிப்புயல், அமெரிக்கா - கனடா எல்லையில் உள்ள ஏரிகளை உறையச் செய்துள்ளது.


கனடாவில் ஆண்டேரியோ மற்றும் க்விபெக் மாகாணங்களில் ஆர்க்டிக் பனிப்பொழிவின் விளைவாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பிரிட்டிஷ் கொலம்பியா முதல் நியூ ஃபவுண்ட்லேண்ட் வரையிலான கனடாவின் பெரும்பாலான பகுதிகள் கடுங்குளிர் மற்றும் பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் இருந்தன. வெள்ளிக்கிழமை வானிலை வரைபடம் "மிக மோசமான குளிர்கால வானிலை எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை சித்தரிக்கிறது" என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) அமைப்பு கூறியுள்ளது. மொன்டானாவின் எல்க் பூங்காவில் வெப்பநிலை -50F (-45C) ஆகக் குறைந்துள்ளது, மிச்சிகனில் உள்ள ஹெல் நகரம் உறைந்துவிட்டது. வெப்பநிலை 1F (-17C) ஆக உறைந்து, பனி மூடியிருந்த வெள்ளிக்கிழமை இரவில் பிபிசியிடம் பேசிய ஸ்மிட்டியின் ஹெல் சலூனில் பார்டெண்டராக பணிபுரியும் எமிலி, "இங்கே மிகவும் குளிராக இருக்கிறது, அது நரக அனுபவத்தைத் தருகிறது" என்றார்.


தெற்கு டுகோட்டாவில் வசிக்கும் அமெரிக்க பழங்குடியினர் எரிபொருள் தீர்ந்த பிறகு, வெப்பமூட்டுவதற்காக ஆடைகளை எரித்ததாக பழங்குடி அதிகாரிகள் தெரிவித்தனர். பென்சில்வேனியா, மிஷிகன் மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள பஃபல்லோ பகுதியில், குறைந்தபட்சம் 89 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் இருப்பதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. நியூ இங்கிலாந்து, நியூயார்க், நியூ ஜெர்சி பிராந்தியங்களின் கடலோரங்களில் கடுமையான வெள்ளம் காணப்படுகிறது. பசிஃபிக் வடமேற்கில், சியாட்டில், போர்ட்லேண்ட் பகுதிகளில் உறைந்த தெருக்களில் சிலர் பனிச்சறுக்கு விளையாடினர். வழக்கமாக அதிகமான பனிப்பொழிவை எதிர்கொள்ளாத லூசியானா, அலபாமா, ஃபுளோரிடா, ஜோர்ஜா ஆகிய தென் மாகாணங்களுக்கும் கடுமையான உறைபனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலை விபத்துகள் உள்பட பனிப்புயல் தொடர்பில் பல உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. ஒஹாயோவில் அடுத்தடுத்து 50 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். பனிக்கட்டிகளை விலக்கும் இயந்திரங்களை கையாளும் நபர்கள் பற்றாக்குறையால் போக்குவரத்துப் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. குறைந்த ஊதியம் வழங்கப்படுவதே இந்நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 5,600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான சேவைகளைப் பின்தொடரும் ஃப்ளைட்அவேர் இணையதளம் கூறுகிறது. இதனால், கிறிஸ்துமசைக் கொண்டாட மக்கள் வீடுகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.


அமெரிக்கா முழுவதும் அன்றைய தினம் 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக PowerOutage.us தளம் குறிப்பிட்டுள்ளது. டென்னசி பள்ளத்தாக்கு முழுவதும் மின்சாரத்தை சேமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றில் இதுவரையிலான, நூற்றுக்கும் மேற்பட்ட குறைந்தபட்ச குளிர்கால வெப்பநிலைப் பதிவுகள் அடுத்த சில நாட்களில் சமன் செய்யப்படலாம் அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலை பதிவாகலாம் என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை அமைப்பு கூறுகிறது. பல இடங்களில் நீண்ட காலமாக இருந்துவந்த குறைந்தபட்ச வெப்பநிலையை நடப்பு குளிர்காலத்தில் ஏற்கனவே எட்டியாகிவிட்டது. கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வரில் வியாழக்கிழமையன்று வெப்பநிலை -24F என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. 1990க்குப் பிறகு அங்கு பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இது ஆகும். ஸ்காட்லாந்தில் இருந்து டென்வருக்கு குடிபெயர்ந்துவிட்ட 34 வயதான கிரெய்க் மெக்பிரீட்டி, "என் அனுபவத்தில் இதுவே மிகவும் குளிர்ச்சியானது," என்று பிபிசியிடம் கூறினார்.

No comments

Powered by Blogger.