Header Ads



புனர்வாழ்வு பணியக சட்டமூலம், ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க அல்ல என்கிறார் விஜேயதாச


புனர்வாழ்வு பணியக சட்டமூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்டதல்லவென நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.


புனர்வாழ்வு பணியக சட்டமூலம், ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதற்காக கொண்டு வரப்படும் சட்டமென பல்வேறு  தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அது உண்மையில், தான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதற்கு முன்னரே தயாரிக்கப்பட்ட ஒன்றென்றும் அமைச்சர் தெரிவித்தார்.


நீதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:


வழமையாக போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொண்ட பின்னரே புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


எனினும் நீதிமன்றங்களின் ஊடாக தமது பிள்ளைகளை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்புவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. அதனை கௌரவ குறைவாகவும் அவர்கள் நினைக்கின்றார்கள்.


அதனைக் கருத்திற்கொண்டு சுயாதீனமாக தமது பிள்ளைகளை அவர்களே புனர்வாழ்வு நிலையங்களில் அனுமதிப்பதற்கு வசதியாகவே இந்த சட்ட மூலம் கொண்டுவரப்படுகின்றது. இந்த சட்டம் மூலத்தின் பிரதான நோக்கமும் அதுவே என்றார்.


அந்த வகையில் தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை அல்லது போராட்டக்காரர்களை அடக்குவதற்காக இந்த சட்டமூலம் கொண்டுவரப்படவில்லை என்பதை உறுதியாக தெரிவித்த அமைச்சர், போராட்டங்கள் இடம்பெறுவதற்கு முன்பே அதாவது 10 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு வந்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.