Header Adsமுஸ்லிம் நாடுகளின் ஆதரவை இழக்கும் இலங்கையும், சுஹைர் எழுப்பியுள்ள முக்கிய கேள்விகளும்...!


இலங்கை சர்­வ­தேச நாடு­க­ளினதும் குறிப்­பாக முஸ்லிம் நாடு­க­ளி­னதும் ஆத­ரவை இழந்து வரு­வ­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எம்.சுஹைர், இம் முறை ஜெனீ­வாவில் இலங்கைப் பிர­தி­நி­தி­க­ளுக்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தலைமை தாங்­கிய போதிலும், இலங்­கைக்கு முன்னர் ஆத­ர­வ­ளித்த முன்­னணி முஸ்லிம் பெரும்­பான்மை நாடுகள் ஆத­ர­வ­ளிப்­பதில் இருந்து தவிர்ந்து கொண்­டமை இதனை தெளி­வாக உணர்த்­து­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.


சமகால விவகாரங்கள் தொடர்பில் அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,


2009 இல் இலங்கை சர்­வ­தே­சத்­துடன் ஒத்­து­ழைத்த போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் அங்கம் வகிக்கும் 47 நாடு­களில் 29 நாடுகள் இலங்­கைக்கு ஆத­ர­வ­ளித்­தன. எனினும் இலங்கை ஒத்­து­ழைக்க மறுத்த போது 2012 இல் இந்த ஆத­ரவு 15 ஆக குறைந்­தது. 2022 இல் 7 நாடுகள் மாத்­தி­ரமே இலங்­கையை ஆத­ரித்­தன. இலங்கைப் பிர­தி­நி­தி­க­ளுக்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தலைமை தாங்­கிய போதிலும், இலங்­கைக்கு முன்னர் ஆத­ர­வ­ளித்த முன்­னணி முஸ்லிம் பெரும்­பான்மை நாடுகள் இம்­முறை ஆத­ர­வ­ளிப்­பதில் இருந்து வில­கின. இது வெளிப்­ப­டை­யா­கவே சர்­வ­தேச நாடுகள் இலங்கை தொடர்பில் கொண்­டுள்ள நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­து­கின்­றது.


அடுத்த முறை முஸ்லிம் பெரும்­பான்மை நாடுகள் இலங்­கைக்கு எதி­ராக வாக்­க­ளிக்­கவே வாய்ப்­புள்­ளது. இலங்­கையில் என்ன நடக்­கி­றது என்­பது அவர்­க­ளுக்கு நன்­றாகத் தெரியும். சவூதி அரே­பியா, ஈரான், கத்தார் போன்ற நாடுகள் எந்த ஒரு நியா­ய­மான கார­ணமும் இல்­லாமல் தங்கள் கால்­களை இங்கு மிதித்து விட்­டன என முன்னாள் ஜனா­தி­பதி ஒருவர் அண்­மையில் ஊட­கங்­க­ளிடம் தெரி­வித்­தி­ருந்தார்.


உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பான மற்­று­மொரு விசா­ரணை விரைவில் ஆரம்­பிக்­கப்­படும் என கடந்த ஒக்­டோபர் 3 ஆம் திகதி, பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் பிர­மித பண்­டார தென்­னகோன் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். இலங்கைப் பொலி­ஸாரால் செய்ய முடி­யா­ததை, மேற்­கத்­திய சார்பு நாடு­க­ளான அமெ­ரிக்­காவின் எப்.பி.ஐ, இங்­கி­லாந்தின் ஸகொட்­லாந்து யார்ட், அவுஸ்­தி­ரே­லிய பெடரல் பொலிஸ் மற்றும் மாலை­தீவு தேசிய பொலிஸ் போன்­ற­வற்றின் புல­னாய்­வா­ளர்கள் செய்யத் தயா­ராக உள்­ளார்­களா என்ற கேள்­வியை இது எழுப்­பு­கி­றது.


இலங்­கையில் நடந்­த­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசா­ரணை நடத்த ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையை ஏன் அனு­ம­திக்கக் கூடாது? நாட்டில் பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் நடை­பெ­ற­வில்லை என்­பதே இலங்கை அரசின் நிலைப்­பா­டாக இருந்தால், ஈஸ்டர் தாக்­குதல் விசா­ரணை போன்ற புதிய விசா­ரணை ஒன்றை ஏன் எதிர்க்க வேண்டும்? வெளி­நாட்டுப் பொலி­ஸாரின் விசா­ர­ணை­களை அனு­ம­திக்கக் கூடாது என்­பதே அரசின் கொள்­கை­யாக இருந்தால், வெளி­நாட்டுப் புல­னாய்­வா­ளர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் மற்­றொரு ஈஸ்டர் விசா­ரணை நமக்கு ஏன் தேவை?


வெளி­நாட்டுப் புல­னாய்­வா­ளர்­களால் இவ்­வா­றான ஒரு விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படும் பட்­சத்தில் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த 2000 பேர் கைது செய்­யப்­பட்ட நிலையில், ஐ.நா மனித உரிமைப் பேர­வையில் இலங்­கையை எதிர்­கொள்­வதில் முன்­ன­ணியில் இருக்கும் சக்தி வாய்ந்த அர­சாங்­கங்­க­ளுக்கு போது­மான மற்றும் அதி­க­மான உரிமை மீறல்கள் குறித்த உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்கள் வழங்­கப்­ப­டலாம். ஐநா மனித உரிமை ஆணை­யத்தில் இலங்­கைக்கு எதி­ராக வெடிக்­கக்­கூ­டிய அள­வுக்கு அதி­க­மான மனித உரிமை மீறல் தட­யங்­களை அமெ­ரிக்­காவும் இங்­கி­லாந்தும் சேக­ரிக்க முடியும். முஸ்லிம் சந்­தேக நபர்கள் தாங்கள் எதிர்­கொண்ட உரிமை மீறல்கள் குறித்து மாலை­தீ­வுகள் உட்­பட வெளி­நாட்டு புல­னாய்­வா­ளர்­க­ளிடம் முறை­யிடக் கூடும்.


ஈஸ்டர் தாக்­கு­தல்­களை விசா­ரிக்க தனிப்­பட்ட நாடு­களைச் சேர்ந்த வெளி­நாட்­டி­னரை அனு­ம­திப்­ப­தற்கு நிச்­ச­ய­மாக சட்­ட­ரீ­தி­யான தடைகள் உள்­ளன, ஆனால் நாட்டில் அதி­க­ரித்து வரும் மனித உரிமை மீறல்­களை விசா­ரிக்க ஐ.நா.வுடன் ஒத்­து­ழைப்­ப­தற்கு அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யான தடைகள் எதுவும் இல்லை.


ஐ.நா. அமைப்­பு­க­ளுடன் ஒத்­து­ழைப்­ப­தா­னது இலங்கை மீதான குற்­றச்­சாட்­டு­க­ளையும் அதன் 22 மில்­லியன் மக்கள் எதிர்­கொள்ளும் கடு­மை­யான உணவுப் பாது­காப்­பின்மை மற்றும் பொரு­ளா­தார அவ­லத்­தையும் சமா­ளிக்க கைகொ­டுக்கும். இலங்­கைக்கு உணவு தொடர்­பான உத­வி­களை வழங்­கு­மாறு உலக நாடு­க­ளிடம் ஏற்­க­னவே ஐ.நா. வேண்­டு­கோள்­வி­டுத்­துள்­ளது.


உயிர்த்த ஞாயிறு விசா­ர­ணைகள் தொடர்பில் ஆட்­சி­யா­ளர்கள் பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி மக்­களை ஏமாற்ற முடி­யாது என கொழும்பு பேராயர் மல்கம் கர்­தினால் ரஞ்சித் கடந்த வாரம் உடு­கம்­பொ­லவில் தெரி­வித்­தி­ருந்தார். “சட்­டத்தை அமு­லாக்கும் நிறு­வ­னங்கள் மற்றும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தை அர­சி­ய­லாக்­கு­வதன் மூலம் அவர்கள் சுதந்­தி­ர­மாக செயல்­பட அனு­ம­திக்­காமல், சர்­வ­தேச அமைப்­பு­களின் உத­வியை நாடு­வது அர­சாங்­கத்தின் மற்­றொரு தந்­தி­ரோ­பா­ய­மாகும்.” ஏன அவர் மேலும் குறிப்­பிட்­டி­ருந்தார்.


21 ஜூலை 2019 அன்று கட்­டு­வாப்­பிட்­டியில் அவர் ஆற்­றிய உரையில் “ உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் ஒரு சர்­வ­தேச சதி, வெறு­மனே முஸ்லிம் தீவி­ர­வா­தி­களின் வேலை அல்ல” என்று குறிப்­பிட்­டி­ருந்தார். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அல் பாக்­தாதி “உலகின் மிகவும் சக்­தி­வாய்ந்த நாட்­டினால்” நடத்­தப்­படும் இரா­ணுவ முகாமில் இருப்­ப­தா­கவும் அதில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.


உள்­நாட்டில் பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக சி.ஐ.டி. மற்றும் ரி.ஐ.டி இன் பல­த­ரப்­பட்ட விசா­ர­ணைகள் ஏற்­க­னவே இடம்­பெற்­றுள்­ளன. மேலும் ஆட்சி மாற்­றத்தின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் சி.ஐ.டி மற்றும் சி.ரி.ஐ.டி.யினரின் புதிய விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவையும் நாங்கள் கண்டுள்ளோம். இந்நிலையில் எமக்கு மற்றொரு உயிர்த்த ஞாயிறு விசாரணை தேவையா? இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் மூன்றரை வருடங்களுக்கும் மேலாக பிணையின்றி இன்னமும் தடுப்புக்காவலில் வாடும்போது ஏன் இப்போது மாத்திரம் புதிய விசாரணை தேவைப்படுகிறது? என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.- Vidivelli

No comments

Powered by Blogger.