Header Ads



கோட்டாபயவின் பதவி விலகல் E Mail மூலம் வந்ததால், அது செல்லுமா என சபாநாயகர் ஆலோசனை


இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான தகவலை மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ. ஆனால், இத்தகைய முறையில் ஒரு ஜனாதிபதி அனுப்பும் தகவல் அரசியலமைப்பின்படி செல்லுமா, அதன் உண்மைத்தன்மையை எவ்வாறு சட்டபூர்வமாக சரிபார்ப்பது என சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆலோசனை நடத்தி வருதவாக அவரது செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

முன்னதாக, தாய்நாட்டில் இருந்து மாலத்தீவுக்கு புதன்கிழமை அதிகாலையில் தமது மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் சென்ற கோட்டாபய, வியாழக்கிழமை நண்பகலில் அங்கிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு உள்ளூர் நேரப்படி இரவு 7.15 மணியளவில் வந்தார்.

அவர் சிங்கப்பூரில் அடைக்கலம் கேட்பார் என்று அலுவல்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த நிலையில், கோட்டாபய தனிப்பட்ட பயணமாகவே சிங்கப்பூருக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளார். அந்த வகையில் தற்போதைய அவரது பயணமும் அதே நோக்கத்துடனேயே இருக்கலாம் என்றும் அந்த அடிப்படையிலேயே அவர் நாட்டுக்குள் வருவதற்கு சிங்கப்பூர் அரசு அனுமதித்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், கோட்டாபய தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோட்டாபய சிங்கப்பூர் அரசிடம் அடைக்கலம் கோரவில்லை. அவருக்கு அடைக்கலமும் தரப்படவில்லை. அடைக்கலம் கோரலை சிங்கப்பூர் ஏற்பதில்லை என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர், இலங்கையிலான உடன்பாட்டின்படி இலங்கையர்கள் சிங்கப்பூருக்குள் விசாயின்றி குறுகிய கால பயணத்தை மேற்கொண்டு அதிகபட்சமாக 30 நாட்களுக்கு தங்கியிருக்கலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியே கோட்டாபய சிங்கப்பூருக்கு வந்துள்ளதாக அறிய முடிகிறது.

முன்னதாக, கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு வரும் தகவல் பிற்பகலிலேயே உள்ளூர் மக்களுக்கு கிடைத்தது. இதையடுத்து அவரை பார்க்க சிறிய அளவில் விமான நிலையத்தில் இருந்த மக்கள் கூட்டம், நேரம் செல்லச்செல்ல அதிகமானது.

வழக்கமாக சிங்கப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு மூன்றாவது முனையத்திலேயே பயணிகளை செளதி ஏர்லைன்ஸ் விமானம் இறக்கி விடும். ஆனால், இன்று இரண்டாவது முனையத்திலேயே அந்த விமானம் பயணிகளை இறக்கி விட்டது.

இதேவேளை, அவர் சமூக வருகை (சோஷியல் விசா) நுழைவு அனுமதி பெற்று நாட்டுக்குள் வந்துள்ளார் என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. கோட்டாபய விவகாரத்தில் நாட்டில் உள்ள சிங்கப்பூர் குடிமக்கள், வேலைக்கான அனுமதி பெற்று பணியாற்றும் வெளிநாட்டினர், சமூக நுழைவு அனுமதி பெற்றவர்கள் அனைவரும் சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும் என்றும் விதிகளை மீறி பொது இடத்தில் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் கோட்டாபய ராஜபக்ஷ எத்தனை நாட்கள் தங்கியிருப்பார், இங்கிருந்து வேறு நாட்டுக்கு செல்வாரா என்பதை கோட்டாபயவோ அவரது தரப்போ தெளிவுபடுத்தவில்லை.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்தமைக்கான 'ஆவணம்' தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாக, சபாநாயகர் அலுவலகம் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியது. ஆனால், மின்னஞ்சல் மூலம் வந்த தகவலை ராஜிநாமா கடிதம் என்று அழைக்காமல் ஆவணம் என்று சபாநாயகர் அலுவலகம் குறிப்பிடுகிறது.இந்த ராஜிநாமா ஆவணம், தொடர்பிலான உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் அலுவலகத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதியிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஆவணம், அவரது ராஜிநாமா கடிதமா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 'ஜனாதிபதியின் ராஜிநாமா' தொடர்பில் எவ்வாறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விதத்தில் தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சபாநாயகர் அலுவலகத்தின் பேச்சாளர் பிபிசி தமிழிடம் கூறினார்.

No comments

Powered by Blogger.