Header Ads



தாமதமின்றி பாராளுமன்றத்தை கூட்டி, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமாறு ACJU வேண்டுகோள்


நெருக்கடியான இந்த சூழலில் நாட்டு மக்கள் அமைதியாக செயற்பாடுமாறும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதையும் வன்முறையையும் தவிர்ந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்வதோடு, அரசியல் தலைமைகள் கால தாமதமின்றி பாராளுமன்றத்தை கூட்டி, அரசியல் ஸ்திரத்தன்மையை நாட்டில் ஏற்படுத்துமாறும் ஜம்இய்யா வேண்டுகோள் விடுக்கின்றது

தற்போது நம் நாட்டில் அமைதியற்ற ஒரு நிலை ஏற்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஜனநாயக ரீதியான இந்த மக்கள் போராட்டத்தை தீய சக்திகள் பிழையான திசைக்கு இட்டுச் செல்வதற்கு மக்கள் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.

அந்த வகையில், நம் நாட்டு மக்கள், குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர், எப்போதும் அமைதியான முறையிலும் ஜனநாயக விழுமியங்களைப் பேணியும் நாட்டு சட்டத்தை மதித்தும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையிலும் வன்முறையில் ஈடுபடாமலும் தம் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

எதிர்வரும் நாட்கள் மிக முக்கியமான நாட்களாக காணப்படுவதால் நாட்டில் அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில் மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் தத்தமது மத விழுமியங்களைப் பேணியும் வன்முறையைத் தவிர்ந்தும் செயற்படுமாறு அனைவரிடமும் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். 

பௌத்த உயர்பீடங்கள் கோரி இருப்பது போன்று, அரசியல் தலைவர்கள் கால தாமதமின்றி பாராளுமன்றத்தை கூட்டி, மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை வழங்குவதன் ஊடாக அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மையை நாட்டில் ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். அத்துடன் இக்கட்டான இச்சந்தர்ப்பத்தில் அரசியல் தலைமைகள் கட்சி முரண்பாடுகளையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் களைந்து, நாட்டின் எதிர்காலத்தையும் சுபிட்சத்தையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.


அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.