சபாநாயகர் - ஜனாதிபதியுடன் அவசர தொலைபேசி உரையாடல்
இலங்கையில் அரசியல் குழப்பம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி - சபாநாயகருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை நியமிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால் இலங்கை ஆபத்தான நாடாகியுள்ளது.
அரசியலமைப்பின் 37.2 ஆம் பிரிவின் கீழ் பிரதம நீதியரசரின் இணக்கப்பாட்டிற்கமைய ஜனாதிபதியின் அதிகாரம், முப்படையினர் அதிகாரம் தனக்கு கிடைக்க வேண்டும் என தான் கூறியதாக வெளியாகிய தகவல்கள் உண்மையில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்க முடியாத அரசியல் கட்சிகள், செய்தியாளர் மாநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக சபாநாயகர், ஜனாதிபதியிடம் விசனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எழுத்தின் மூலம் சவால் விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற பாரம்பரியத்திற்கு ஏற்ப பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தினை செவிமடுப்பது சபாநாயகரின் தவிர்க்க முடியாத கடமை எனவும் அவர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவல்களை விசேட அறிக்கை ஒன்றின் மூலம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

Post a Comment