தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் பற்றி கரு வேதனை - ஜனாதிபதி தன் கடமையை சரியாக செய்தாலே போதுமானது என தெரிவிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கூடிய சர்வ கட்சி கூட்டத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய புறக்கணித்தார். அத்துடன் கடந்த வாரம் பாராளுமன்ற ஒழுக்கத்தை மீறி சபாநாயகரை அவமதித்த சகல நடவடிக்கைகள் மீதான அதிருப்தியில் உள்ளதாகவும் சபாநாயகர் தொலைபேசி மூலம் ஜனாதிபதிக்கு நேரடியாக தெரியப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கும் அழைப்பு விடுத்திருந்தார். எனினும் தான் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என சபாநாகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்ததுடன் நேற்றைய கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை.
நேற்று காலை ஜனாதிபதியை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய தான் சர்வ கட்சி சந்திப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என்ற காரணத்தை எடுத்துக்கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாக தனக்கும் பாராளுமன்றத்திற்கும் ஏற்பட்ட அவமானச் செயல்களை பல தடவைகள் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியும் ஜனாதிபதி தொடர்ச்சியாக சபாநாயகரை நிராகரித்தமை மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சிலர் நடந்துகொண்ட விதம் குறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காதமை ஆகிய விடயங்களை சபாநாயகர் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியதாகவும் அவர் கூறியதாக சபாநாயகர் காரியாலயத்தின் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணியும் நேற்றைய சர்வ கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. தாம் கூட்டத்தில் கலந்துகொண்டு புதிதாக எடுப்பதற்கு எந்த தீர்மானமும் இல்லை ஜனாதிபதி தனது கடமையை சரியாக செய்தாலே போதுமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment