பிரதமருடன் மோதலொன்றை, ஜனாதிபதி ஏற்படுத்திக் கொண்டுள்ளார் - Part 2
மஹிந்தவைத் தோற்கடித்த அரசியல் குழுவினருக்குப் பெரிய எதிர்கால நோக்கு எதுவும் காணப்படவில்லை. அதனோடு தொடர்புபட்ட எந்தவொரு இயக்கத்திற்கும் இப்பிரச்சினையை வெற்றி கொள்வதற்கான முன்னேற்பாடு எதுவும் காணப்படவில்லை. அரசியல் அதிகாரம் தொடர்பாகவும் கூர்மையான தெளிவு காணப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றியின் பின்பு, தற்காலிக அரசாங்கமொன்றை ஏற்படுத்தி விரைவாக பாராளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதற்குப் பதிலாக, தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதிக்கு முன்னைய பாராளுமன்றத்தில் காணப்பட்ட பெரும்பான்மைப் பலத்தைக் கருத்திக் கொள்ளாது மட்டுப்படுத்தப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தினை முன்னெடுக்கும் திட்டத்தை நோக்கி அவர்கள் சென்றனர். அதன் ஊடாக மட்டுப்படுத்தப்பட்ட மறுசீரமைப்பு வேலைத்திட்டம் கூட சிதைக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் பலமான அதிகாரமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு காணப்பட்ட சந்தர்ப்பத்தையும் இல்லாமலாக்கிக் கொண்டனர். இது வெற்றி பெற்றவர் தனது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிக்காட்டிய பிரதான சந்தர்ப்பமாகும்.
உண்மையில் நடக்க வேண்டியிருந்தது அரசாங்கத்தின் தலைவரைத் தோற்கடித்த பின்பு உடனடியாக பாராளுமன்றத் தேர்தலுக்குச் சென்று, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தையும் தோற்கடிப்பதாகும். அதன் ஊடாக பாராளுமன்றத்தில் பலமான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதாகும். அவ்வாறு செய்யாமையினால் வெற்றி பெற்றவரினால் தோற்கடிக்கப்பட்டவரின் பாராளுமன்றத்தைப் பாரியளவில் தோல்வியடையச் செய்வதற்குக் காணப்பட்ட சந்தர்ப்பத்தை தொலைத்துக் கொண்டனர்.
வெற்றி பெற்ற ஜனாதிபதி தோல்வியுற்ற ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டமை, அதன் பின்பு தனது கட்சியின் அதிகாரத்தை தனக்கு கீழ் கொண்டு வருவதற்காக அதிகாரக் கயிறிழுப்புக்கு முக்கியத்துவம், முன்னுரிமை வழங்கி செயற்பட்டமை நல்லாட்சி அரசாங்கத்தின் பயணத்தை சிக்கலுக்குள் தள்ளிய பிரதான காரணி என்று கூறலாம். அக்கட்சியின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக, கொள்கைகளைக் கருத்திற் கொள்ளாது செயற்பட வேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டதோடு, அதன் ஊடாக ஜனாதிபதி தான் பெற்றிருந்த கீர்த்திக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டார். தனது ஆதரவாளர்களை அதிகரித்துக் கொள்வதற்காக ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய தவறுகளுக்குப் பொறுப்பானவர்களையும் அவர்களது அபகீர்த்தி மிக்க பின்புலத்தைக் கருத்திற் கொள்ளாது தன்னோடு இணைத்துக் கொள்ளும் கொள்கையைக் கடைபிடித்தார். அதன் மூலம் அவ்வாறானவர்கள் ஊடாக இடம்பெற்ற தவறுகளுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்பட மாட்டாது என்பதைக் வெளிக்காட்டினார். அதற்கெனக் குறிப்பிட முடியுமான மிகவும் பிந்திய உதாரணம் சஜின் வாஸ் ஆவார்.
சஜின் வாஸ்
சஜின் வாஸ் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட முறைகேடாக சொத்துக்களை சம்பாதிக்கும் வேலைத்திட்டத்தின் பிரதான முன்னோடியாக செயற்பட்டார். அவர் முன்னாள் ஜனாதிபதிக்கு இருந்த நம்பிக்கைக்குரிய சகாக்களில் ஒருவர் ஆவதோடு, பொதுச் சொத்;துக்களை முறைகேடான முறையில் பெற்றுக் கொள்ளும் கலையை முன்னாள் ஜனாதிபதிக்கு கற்றுக் கொடுத்த பிரதான ஆசிரிய ஆலோசகரும் ஆவார். அவர் முறைகேடாக சம்பாதித்த சொத்தின் அளவு மிகவும் பாரியதாகும். அரசாங்கம் மாறியவுடனேயே அவர் தனது அரசியல் பயணத்திற்கான பாதையையும் மாற்றிக் கொண்டார். முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுதிலிருந்து ஒதுங்கி, புதிய ஆட்சிக்குத் தலைகுனிந்து செயற்படும் நிலைக்கு அவர் மாறினார். தற்போது தான் இழந்துள்ள தொகுதி அமைப்பாளர் பதவியையும் விரைவில் மீளப் பெற்றுக் கொள்ளும் நிலைமையில் அவர் உள்ளார்.
சஜின் வாஸ் கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் நிலையில் இருந்தால், அவர் குறித்து நெகிழ்ச்சியான போக்கை கடைபிடிப்பதில் பிழையில்லை. ஆனால், அதற்;;காக வேண்டி அவர் முறைகேடாக சம்பாதித்த பாரியளவான சொத்துக்ககளைத் தன்னிடம் வைத்திருப்பதற்கான உரிமை அவருக்குப் பெற்றுக் கொடுக்கப்படுமாயின் அது நாட்டுக்கு செய்யப்படும் துரோகமாகும். அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அவர் முறைகேடாக சம்பாதித்துள்ள சொத்துக்களை அரசுடைமையாக்குவதனையே செய்ய வேண்டும். ஜனாதிபதிக்கு அவசியமாயின், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின்பு மன்னிப்பு வழங்கலாம். எனினும், உண்மையில் அவர் தொடர்பாக மாத்திரமன்றி தமக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் புரிந்துள்ள தவறுகளுக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தை அமுல்படுத்தாத ஒரு கொள்கையைப் பின்பற்றுவதே நடைபெறுகிறது. அதன் காரணமாக, வழக்குகளை எதிர்நோக்கியுள்ளவர்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக வேண்டி ஜனாதிபதிக்கு சார்பான குழுவினருடன் இணையும் ஒரு போக்கு உருவாகியுள்ளது எனலாம்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்திற்காக வேண்டி ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெறும் போட்டியின்போது சிலசமயங்களில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக அழுத்தத்தினைப் பிரயோகிப்பதற்காக அவராலும், அவரது குடும்பத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட தவறுகள் தொடர்பாக கடுமையான கொள்கையை ஜனாதிபதி பின்பற்றுகிறார். வேறு சில சந்தர்ப்பங்களில் கட்சி ஆதரவாளர்களிடமிருந்து ஏற்படும் அழுத்தங்கள் காரணமாக அவ்வாறான கடுமையான கொள்கையிலிருந்து நெகிழ்ந்து செல்லும் போக்கை அவர் கடைபிடிக்கிறார் என்றும்; புலப்படுகிறது. ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக பின்பற்றும் இந்த இரட்டைக் கொள்கை முன்னாள் ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் செய்துள்ள தவறுகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை சிக்கலில் தள்ளுவதற்கு காரணமாய் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிகாரப் போட்டியும் பனிப் போரும்
ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதியுடன் மோதுவதற்கு மேலதிகமாக, தனது பிரதமருடன் பனிப் போரி;ல் ஈடுபட வேண்டி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பிரதமருடன் மேற்கொள்ள வேண்டியுள்ள அப்பனிப் போர் நல்லாட்சி அராசாங்கத்தின் அலுவல்களை விசேடமாக பொருளாதாரக் கொள்கைகளை சிக்கலுக்குள் தள்ள காரணமாய் அமைந்துள்ளதாகத் தெரிகிறது.
ஜனாதிபதிக்கு ஐந்து வருடங்கள் மாத்திரமே பதவி வகிக்கலாம். பதவிக் காலத்தின் ஐந்து வருடங்கள் கழிந்த பின்பு ஜனாதிபதி தனது பதவியைக் கைவிட்டாலும், மண்டேலா போன்று அவர் ஓய்வு பெறுவார் என நினைக்க முடியாது. உத்தியோகபூர்வ பதவிக் காலம் முடிவடைந்த பின்பு, நடைபெறும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம வேட்பாளராகவோ, அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படாவிடின் ஜனாதிபதி வேட்பாளராகவோ போட்டியிடும் தேவை காணப்படுவதாலேயே ஜனாதிபதிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் அவ்விடயம் குறித்து பிரதமரும் கவனத்தில் கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கலாம். அந்த நிலைமை காரணமாகவே மஹிந்தவை அரசியலிலிருந்து முழுமையாக ஓரங்கட்டும் கொள்கைக்குப் பதிலாக, அவர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பளிக்கும் கொள்கை தனது எதிர்கால நலனுக்கு காரணமாய் அமையும் என்று பிரதமரும் சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். அது அவ்வாறாயின், ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள், ஊழல் மோசடிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை பலவீனப்படுத்த அக்காரணியே தாக்கம் செலுத்தியிருக்கலாம்.
வழக்கமான முறையில் விடயங்கள் இடம்பெற்றிருந்தால், இந்த அரசாங்கத்தின் தலைமைத்துவம் ரணிலுக்கே கிடைத்திருக்கும். மைத்திரிக்கு அல்ல. ஏனெனில் அப்போது ரணிலே நாட்டில் காணப்பட்ட பலமான எதிர்க்கட்சியின் தலைவராக இருந்தார். எனினும், அப்போது நாட்டின் அரசியல் போக்கு ரணில் விக்ரமசிங்கவை அன்றி, வேறு ஒருவரைப் பொது வேட்பாளராக்க வேண்டும் என்றவாறு காணப்பட்டது. அப்போது ரணில் அந்தப் போக்குக்கு எதிராக எதேச்சதிகார முறையில் செயற்படும் நிலைக்குச் செல்லவில்லை. அதற்குப் பதிலாக பொது வேட்பாளராக களத்திற்கு வந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஆதரவளிக்கும் கொள்கையைப் பின்பற்றியதன் மூலம் வெற்றியின் பின்பு உருவாகும் புதிய அரசாங்கத்தில் தனக்கு இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்டார். அடுத்த தடவை முதலாவது அடத்திற்கு வருவது அவரது இலக்காக காணப்படலாம். ஐக்கிய தேசியக் கட்சி அப்போது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக பாரிய பணியாற்றியது எனலாம்.
வெற்றியின் பின்பு ஜனாதிபதி தனது அலுவல்களை அரச தலைவர் என்ற கட்டமைப்பினுள் வரையறுத்துக் கொண்டு, அரசாங்கத்தின் தலைவராக செயற்படும் பூரண அதிகாரத்தை தனக்கு வழங்குவார் என்பது பிரதமரின் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். அவ்வாறே ஜனாதிபதியின் ஐந்து வருட பதவிக் காலம் முடிவடைந்த பின்பு உருவாகும் பாராளுமன்ற அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்குத் தான்; தெரிவாக இடமளித்து விட்டு, ஜனாதிபதி ஓய்வு பெறுவார் அல்லது வேறு பொருத்தமான பதவிக்குச் செல்வார் என்ற நம்பிக்கையில் பிரதமர் இருந்திருப்பார்.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்பு தற்போது இங்கு காணப்படும் ஆட்சி ஒழுங்கானது, அவ்வப்போது ஏற்பட்ட திருத்தங்களின் பின்பு, தற்போது பிரான்ஸ் நாட்டில் அமுலில் உள்ள அரசியல் முறைமையை ஒத்துள்ளது. பிரான்ஸ் அரசின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருப்பதோடு, அரச தலைவர் என்ற வகையிலும் ஜனாதிபதியே காணப்படுகிறார். அரசாங்கத்தின் அனைத்து அலுவல்களும் பிரதமரால் வழிநடாத்தப்படுவதோடு, அரசாங்கத்தின் தலைவராகவும் பிரதமரே கருதப்படுகிறார். ஜனாதிபதி பிரதமரின் அலுவல்களிலோ அல்லது பிரதமர் ஜனாதிபதியின் அலுவல்களிலோ மூக்கை நுழைப்பதில்லை. இக்காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதனை ஒத்த வகையிலேயே இடம்பெற்றிருக்க வேண்டும். எனினும், 19 ஆந் திருத்தத்தின் பின்பு கூட இன்னும் பழைய ஜனாதிபதி முறைமையில் காணப்பட்டது போன்று தான் நிகழ்வுகள் இடம்பெறுவதைக் காணலாம்.
இச்சந்தர்ப்பத்தில் இலங்கை பொருளாதார ரீதியாக பாரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது. அதிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அப்பொறுப்பு வழங்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமான நபர் அவரே. அவர் அத்துறை குறித்து அறிந்தவராக இருப்பதோடு, பொருளாதார முகாமைத்துவம் அவருக்குப் பழக்கமான ஒரு துறையாகவும் காணப்படுகிறது. 2001 ஜூலை மாதம் புலிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தாக்கிய நிலையில், நாட்டின் பொருளாதாரம் எதிர்மறைப் பெறுமானத்தைக் கொண்டதாக மாறியது. அப்பொருளாதார சிக்கலை ரணில் விக்ரமசிங்கவே சிறப்பாக வெற்றி கொண்டார். இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள சவாலை வெற்றி கொள்ளும் பொறுப்பை அவர் சுமந்து கொண்டுள்ள சந்தர்ப்பத்தில், அதற்காக வேண்டி அவர் முன்வைக்கும் கொள்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது நாட்டு நலனுக்கு சாதகமானதாக அமையப் போவதில்லை. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலொன்றைக் காப்பாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளின்போது அந்த கப்பலில் இடம்பெறும் செயற்பாடுகள் வழமையான செயற்பாடுகள் போன்று காணப்பட மாட்டாது.
பொருளாதாரம் மனித உணர்வுகளுடன் தொடர்புடைய ஒரு துறையாகும். அதன் பிழையான சமிக்ஞைகள் காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்படலாம். பிரதமரின் புதிய வரிக் கொள்கையுடன் ஜனாதிபதி மோதலொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பது தெளிவாகவே விளங்குகிறது. பிரச்சினையொன்று காணப்படும் சந்தர்ப்பத்தில் அதனை வெற்றி கொள்வதற்காக அமுல்படுத்தப்படும் கொள்கை தற்காலிகமாக அழுத்தங்களை ஏற்படுத்துவதாக இருக்கலாம். இந்த அழுத்தம் மிக்க கொள்கைகளின் நோக்கம் பிரச்சினையை விரைவாக வெற்றி கொண்டு மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதாயின் அதற்கு இடையூறு ஏற்படுத்துவது நாட்டு நலனுக்குப் பாதிப்புக்களையே ஏற்படுத்தும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் பெருங்குழப்பநிலையிலேயே இடம்பெறுகின்றன. அதன் விளைவாக நாட்டு நலனுக்கு காரணமாய் அமையும் பாரிளயவான மறுசீரமைப்புக்கள் இடம்பெறும் வாய்ப்புக்கள் இல்லை எனலாம். சிறந்ததோர் புதிய அரசியலமைப்பு குறித்தாவது எதிர்பார்ப்பு வைக்க முடியாதுள்ளது. ஜனாதிபதியும், பிரதமரும் ஒன்றாக சந்தித்து தத்தமது எல்லைகள் குறித்து ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதன் மூலம் மாத்திரமே இந்த நிலைமையில் ஓரளவாவது நல்ல மாற்றங்கள் ஏற்படும். இவர்கள் இருவரும் ஒருவரில் ஒருவர்; மாறி மாறித் தங்கியுள்ளனர் என்பதை இத்தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பிரதமர் ரணிலுக்கு ஜனாதிபதி மைத்திரி இன்றி நிலைத்திருக்க முடியாது என்பதோடு, ஜனாதிபதி மைத்திரிக்கு பிரதமர் ரணில் இன்றி நிலைத்திருக்கு முடியாது. இருவருக்கிடையிலும் காணப்படும் நம்பிக்கையீனங்களுக்கான காரணம் ஒன்றுக்கொன்;று முரணான எதிர்பார்ப்புக்கள் ஆயின், அந்த முரண்பாட்டினை நீக்கிக் கொள்வதற்காக வேண்டி இரு தலைவர்களும் தூய்மையான உள்ளத்துடன் கலந்துரையாடல் மேசைக்குச் செல்ல வேண்டும்.
நன்றி – ராவய (2016.05.01) சிங்களத்தில் - விக்டர் ஐவன்
தமிழில் - ஹேனேகெதர பழீல்

Post a Comment