Header Ads



நல்லாட்சியின் உண்மை நிலை - Part 1

நன்றி – ராவய (2016.05.01)
சிங்களத்தில் - விக்டர் ஐவன்
தமிழில் - ஹேனேகெதர பழீல்    

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டமையானது அதற்குப் பங்களிப்பு செய்த பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தக் காரணமாய் அமைந்ததோடு, ஏற்பட்ட அந்தப் புரட்சி நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்பினர். கடந்த ஆட்சியின்போது தவறு செய்தவர்களை விசாரித்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதிகாரத்திற்கு வரும் ஆளுங் கட்சியினால் நாட்டின் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்படும் நிலைமை முற்றுமுழுதாக இல்லாமல் செய்யப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். சட்டம் மிகவும் சரியான முறையில் அமுல்படுத்தப்படும் முறைமையொன்று உருவாக்கப்படும் என்று நம்பினர். பழைய ஆட்சிமுறைமைக்குப் பதிலாக தேசத்தை ஒற்றுமைப்படுத்தக் காரணமாய் அமையும் வினைத்திறன் மிக்க ஆட்சி முறைமையொன்று உருவாக்கப்படும் என்று நம்பினர். நாட்டின் சீர்குலைவுக்கு காரணமாய் அமைந்த விடயங்களை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வு பெற்றுத் தரப்படும் கொள்கையொன்று அமுலாக்கப்படும் என்றும் நம்பினர். சுருங்கக் கூறின் ஏற்பட்ட மாற்றமானது படிப்படியாக நீதி ஆட்சி செய்யும் தேசமொன்றை உருவாக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். 

எதிர்பார்ப்புக்களின் யதார்த்தம்

ராஜபக்ஷ அரசாங்கத்தைத் தோற்கடித்து ஒரு வருடமும் மூன்று மாதமும் கடந்திருந்தாலும் பொதுமக்கள் எதிர்பார்த்தவாறான மாற்றமொன்றை ஏற்படுத்தக் காரணமாய் அமையும் அடிப்படையாவது இது வரை உருவாக்கப்படவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் பாரிய குற்றங்கள், ஊழல், மோசடிகளை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகள் நம்பிக்கை தரக் கூடிய நிலைமையில் காணப்படவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று பாரியளவான ஊழல்கள் இடம்பெறாவிட்டாலும், ஊழல் மோசடிகளை மேற்கொள்வதற்கு காணப்படும் வாய்;ப்புக்களை முழுமையாகத் தடுப்பதற்கான வழிமுறைகள் நாட்டில் ஏற்படுத்தப்படவில்லை. அரசியலமைப்பு சபையின் கீழ் காணப்படும் சுயாதீன ஆணைக்குழு முறைமை மீள ஏற்படுத்தப்பட்டாலும் அவை அரச நிறுவனங்களின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாய் அமையவில்லை. எவ்வளவு தான் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கபட்டாலும் திருட்டு யானையோடு, அந்த யானையின் உரிமைக்காகப் போலி ஆவணங்களைத் தன்வசம் வைத்திருந்த நீதிபதி இன்னும் கூட நீதிமன்றத்தில் வழக்கு விசாரித்துக் கொண்டிருக்கிறார். நாட்டின் சட்டம் அமுல்படுத்தப்படுவதிலுள்ள நகைப்புக்கிடமான நிலைமை இதன் ஊடாகத் தெளிவாகிறது. புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக முன்;வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் கூட மக்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியதாக காணப்படவில்லை. வெளிநாட்டுத் தொடர்புகள் சம்பந்தமான துறையில் மாத்திரமே சிறப்பான முன்னேற்றம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மேற்கத்தேய சக்திகள் இலங்கை தொடர்பாக பேணிச் சென்ற கடுமையான கொள்கை நாட்டு நலனுக்கு ஏற்றவாறு மாற்றமடைந்துள்ளது என்று கூறலாம். இனங்களுக்கிடையிலான தொடர்புகளில் புரட்சிகரமான மாற்றமேதும் ஏற்படாவிடினும், ஏற்கனவே காணப்பட்ட மோசமான நிலைமையுடன் ஒப்பிடும்போது தற்போது நிலைமை நன்றாக உள்ளது எனலாம்.

இந்த அனைத்து விடயங்களின் மத்தியிலும் கூட, அரசில் ஏற்பட்டிருந்த அழுகிப் போன நிலைமை தொடர்பான செய்திகளையே ஊடகங்கள் அடிக்கடி வெளியிட்டன. அரசில் ஏற்பட்டிருந்த அழுகல் நிலைமை ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டதன்று. அது அவருக்கு முன்பிருந்த ஆட்சியாளர்களிடம் இருந்து அவர் பெற்றுக் கொண்ட அன்பளிப்பாகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின்போது அந்த அழுகல் நிலைமை உச்ச நிலையை அடைந்தது. மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக ஜனாதிபதிக்கு வரையறையற்ற அதிகாரத்தை வழங்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து அரசை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கப் பெற்றது. எனினும் அந்த விழிப்புணர்வு சரளமான ஒன்றாக காணப்பட்டதன்றி முதிர்ச்சியடைந்த அளவில் விருத்தி பெறவில்லை. 

அவர்கள் அனைத்தையும் சரளமாகவே நோக்கினர். மஹிந்தவைத் தோற்கடிக்க அவர்களுக்கு ஒரு வீரர் தேவைப்பட்டார். மஹிந்தவைத் தோற்கடித்து நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து 17 ஆந் திருத்;தத்தினைப் பலப்படுத்துவதன் ஊடாக மாத்திரம் இலங்கையை சிறந்த நாடாக மாற்றிக் கொள்ள முடியும் என்று அவர்கள் நம்பிக்கை வைத்தனர். அந்த வகையில் சோபித்த தேரரின் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் அரசியல் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்களவான முன்னேற்றத்தைப் பெற்றிருந்த அந்த மக்களின் கருத்துக்களைப் பிரதிபலித்த சமூக இயக்கமாக காணப்பட்டது எனலாம்.

சமூக நீதிக்கான மக்கள் இயக்கம்

சமூக நீதிக்கான மக்கள் இயக்கமானது அரசியல் கட்சி போன்று ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் இயக்கம் அல்ல. அது நெகிழ்வுத்தன்மை கொண்ட சமூக இயக்கமாகும். அதற்கென விசேடமாகப் பயிற்றுவிக்கப்பட்ட அங்கத்தவர்கள் காணப்படவில்லை. ஆதரவாளர்களை வலையமைப்பு ரீதியாக ஒழுங்கமைத்த இயக்கமாகவும் காணப்படவில்லை. அது கருத்தியல் ரீதியான இயக்கமாகக் காணப்பட்டதோடு, இலங்கையை மீட்டெடுப்பதற்கு அந்த இயக்கம் முன்வைத்த கருத்துவத்தை ஏற்றுக் கொண்ட குறிப்பிடத்தக்களவான மக்கள் பிரிவினர் நாட்டில் காணப்பட்டனர்.

அந்த இயக்கம் முன்வைத்த சரளமான அரசியல் நோக்கு மக்களைக் கவரும் வகையில் காணப்பட்டாலும், நடைமுறை ரீதியாகப் பார்க்கும்போது அந்த நோக்கிற்கேயுரிய பல்வேறுபட்ட குறைபாடுகள் காணப்பட்டன. அது மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்காக வேண்டி மஹிந்தவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து செயற்படும் அனைத்து அரசியல் கட்சிகளினாலும்; ஏற்றுக்கொள்ளப்படும் பொது வேட்பாளர் ஒன்றை வேண்டி நின்றது. அதற்காகத் தெரிவு செய்யப்படும் நபர் அரசியலில் உள்ளவராக இருத்;தல் கூடாது. அவர் அரசியலுக்கு வெளியே சுயாதீன ஒருவராக இருக்க வேண்டும். பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஏற்கனவே உள்ள அரசியலைமப்புக்கு கொண்டு வரும் திருத்தம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி முறைமையை ஒழித்து, சுயாதீன ஆணைக்குழு முறையைப் பலப்படுத்தி, பாராளுமன்றத்தைக் களைத்து விட்டு வீடு செல்ல வேண்டும். பொது வேட்பாளரின் பணி அந்தக் குறிப்பிட்ட பணியோடு முடிவடைந்து விட வேண்டும் என்று அது எதிர்பார்த்தது.

இந்தக் கருத்துவம் காரணமாக அரசியல் மட்டத்தில் காணப்பட்ட எந்தவொரு தலைவருக்கும் மஹிந்தவைத் தோற்கடிக்க முடியாதென்ற கருத்து பலமாக சமூகமயப்பட்டது. அதன் ஊடாக பாரிய நஷ்டம் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கே ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளேயும் பேதங்கள் காணப்பட்டதோடு, அக்கட்சியில் ரணிலை விரும்பாதவர்கள் அக்கருத்துவத்தை ஏற்றுக் கொண்டு அதற்காக வேண்டி வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ செயற்படுபவர்களாக மாறியமையினால் நாட்டில் காணப்பட்ட பெரும் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரணிலுக்கு இருந்த வாய்ப்பு இல்லாமல் போனது. அப்போது அவர் மனம்போன போக்கில் செயற்படும் நிலைக்குச் சென்றிருந்தால் அவர் முழுமையாக அழிவை சந்திக்கும் வாய்ப்பு காணப்பட்டது. எனினும், அப்போது அவர் மனம்போன போக்கில் செயற்படாமல், நெகிழ்ச்சியான போக்கை கடைபிடித்தமையினால் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. அது அவர் தனது மதிநுட்பத்தை வெளிப்படுத்திய தருணம் எனலாம்.

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தினால் சமூகமயப்படுத்தப்பட்ட கருத்துருவம் காரணமாக சமூகம் நன்கறிந்த அரசியல் தலைவர் ஒருவருக்குப் பதிலாக வானத்தைப் பிய்த்துக் கொண்டு விழும் ஒரு இளவரசர் போன்ற ஒருவரை சமூகம் அதிகம் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது.

அந்த இயக்கம் முன்வைத்த பிரசித்தமான கருத்துருவத்தின் இன்னுமொரு குறைபாடு மஹிந்தவைத் தோற்கடித்த பின்பு பாராளுமன்றத்தைக் களைக்காமல், மஹிந்தவுக்குப் பெரும்பான்மைப் பலம் காணப்பட்ட முன்னைய பாராளுமன்றம் ஊடாகவே அவர்களது மட்டுப்படுத்தப்பட்ட மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நிறைவேற்றும் கொள்கையாகும். மஹிந்த தோற்கடிக்கப்பட்ட பின்பு அவரது அனைத்துப் பாராளுமன்ற சகாக்களும் மஹிந்தவைக் கைவிட்டு தமது மட்டுப்படுத்தப்பட்ட மறுசீரைமப்புத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவர் என அக்கருத்தை உருவாக்கியவர்கள் நம்பினர்.

அனைத்து விடயங்களும் அந்த இயக்கம் சிந்தித்தமை போலவே இல்லாவிடினும், அந்த இயக்கம் வெளியிட்டிருந்த சரளமான கருத்துருவத்துக்கு ஏற்பவே இறுதியில் பெரும்பாலான விடயங்கள் இடம்பெற்றன. மைத்திரிபால சிறிசேன அந்த இயக்கத்தின் தெரிவாக இல்லாவிட்டாலும், அவர் பொது வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்த பின்பு அவரை ஏற்றுக் கொள்வதன்றி நிராகரிக்கும் நிலைமையில் அந்த இயக்கம் காணப்படவில்லை. அந்தக் கருத்துருவம் காரணமாக நடைபெற்ற முக்கிய விடயம் என்னவெனில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த முடிந்தமை மற்றும் அதன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முடிந்தமையாகும். தொடரும்


No comments

Powered by Blogger.