Header Ads



ஹுசைன் வலியுறுத்தியதை, சகிக்க முடியாது - ஜி.எல்.பீரிஸ் காட்டம்

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவை இலங்கை அகற்ற வேண்டுமெனவும் அதன் பணியை நம்பகரமான அமைப்பொன்றிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் செய்த் அல் ஹுசைன் வலியுறுத்தியிருந்ததை தேவையற்றதும் சகிக்க முடியாததுமானதொன்றென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார். 

சட்டத்துறை நிபுணரான  முன்னாள் அரசியலமைப்பு விவகார அமைச்சர் பீரிஸ், "காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவை அகற்றுமாறும்  இலங்கையின் சட்ட முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் கேட்பது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதும் அவரின் பதவிக்கு அப்பால் சென்றதுமான விடயமென எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார். 

தனது அறிக்கை தொடர்பாக அல் ஹுசைனின்  கருத்தும் அறிக்கையின் விசாரணைகளும் அவர் (அல் ஹுசைன் ) ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் அவரின் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை மீறிச் சென்றிருப்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருப்பதாக அமைந்திருக்கின்றன என்று பீரிஸ் கூறியுள்ளார். 

"அவர் (ஹுசைன்) அறிக்கையை சமர்ப்பித்த போது அது மிகவும் தனித்துவமானதெனவும் முதல்தடவையாக இந்த மாதிரியான விசாரணையை அவரின் அலுவலகம் நடத்தியிருந்ததாகவும் அவரே குறிப்பிட்டிருந்தார் என்றும் பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.

கலப்பு நீதிமன்றத்துக்கான அழைப்பு விடுக்கும் அமெரிக்க தீர்மானத்தின் நகல் வரைபை புகழ்ந்தும், சொந்தமாகக் கொண்டும் செயற்படுவதற்குப் பதிலாக கொழும்பு சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் பீரிஸ் கூறியுள்ளார்.

பணயக் கைதிகளை மீட்பது தொடர்பாக இந்தச் சட்டங்களை பயன்படுத்தியிருக்க வேண்டும் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது கொழும்பின் செயற்பாடுகளுக்காக அதனை குற்றம்சாட்ட முடியாதென்றும் பீரிஸ் வாதத்தை முன்வைத்திருக்கிறார். 3 இலட்சம் பொது மக்களை பணயக் கைதிகளாக புலிகள் வைத்திருந்தனர்.

மிகவும் குறுகிய நிலப்பகுதிக்குள்அவர்களை வைத்திருந்தனர். வெளியேற முயன்றவர்களைச் சுட்டனர். அதேவேளை இலங்கை இராணுவம் பணயக் கைதிகளை மீட்கும் பணியை மேற்கொண்டது. சர்வதேச சட்டத்தினால் தெளிவான முறையில் அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைளை இலங்கை இராணுவம் மேற்கொண்டிருந்தது என்று பீரிஸ் கூறியுள்ளார். 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2014 மார்ச் அமர்வில் 47 உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாகச் சென்றிருக்கவில்லை. அதனை இலங்கை பயன்படுத்தியிருக்க முடியும் என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார். ' அச்சமயம் தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. 12 நாடுகள் எதிர்த்தும் 12 நாடுகள் புறக்கணித்துமிருந்தன.

10 ஆவது பத்தியில் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அது வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது பெரும்பான்மை ஆதரவு இருக்கவில்லை.  அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது இந்தியா புறக்கணித்திருந்தது.

அதேவேளை அந்தப் பத்தாவது பத்திக்கு எதிராக வாக்களித்திருந்தது என்று பீரிஸ் நினைவு கூர்ந்துள்ளார். 47 உறுப்பு நாடுகளில் பத்தாவது பத்திக்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்திருந்தன.  14 நாடுகள் எதிராகவும் 10 நாடுகள் புறக்கணித்தும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
=

No comments

Powered by Blogger.