பாகிஸ்தான் + ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 335 ஆக அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், அந்நாட்டில் மட்டுமின்றி பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவிலும் எதிரொலித்தது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானில் 335 பேர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகளால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையம் கொண்டு, நேற்று பிற்பகல் 2.40 மணி அளவில் (இந்திய நேரப்படி) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது. 213.5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது.
1000க்கும் மேற்பட்டோர் காயம்: மலைப்பிரதேசங்களில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பெஷாவர் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். எந்த உத்தரவுக்கும் காத்திருக்காமல் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
மீண்டும் நிலநடுக்கம்: இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 40வது நிமிடத்தில் நில அதிர்வு ஏற்படத் தொடங்கியது. முதல் நில அதிர்வு, ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளில் பீதி அடைந்துள்ள மக்கள் இரவு முழுவதும் தெருக்களிலேயே தங்கினர்.
பீதியில் வடஇந்திய மக்கள்: இந்த நில அதிர்வு ஜம்மு காஷ்மீர், டெல்லி, உத்தரகாண்ட், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் வீடுகள், மேம்பாலங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. தலைநகர் டெல்லியில் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறி தெருக்களில் குவிந்தனர். செல்போன், தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டது. டெல்லியில் மெட்ரோ ரயில்கள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன.
காஷ்மீரில் 2 வீரர்கள் காயம்: காஷ்மீர் பாராமுல்லா மாவட்டம் சோப்பூர் பகுதியில், நில அதிர்வு காரணமாக ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகள் சரிந்தன. இதில், பதுங்கு குழியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், தேசிய நிவாரண மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2005ல் அக்டோபர் 8ம் தேதி இந்தியா, பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 1,400 பேர் பலியாகினர். அதன் பிறகு மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் நில அதிர்வு உணரப்பட்டது
ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் 2.30 மணிஅளவில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக இந்தியாவின் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. சென்னையிலும் கோயம்பேடு, நந்தனம், சைதாப்பேட்டை மற்றும் வட சென்னை பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. பல இடங்களில் மக்கள் பீதி அடைந்து சாலைக்கு ஓடி வந்தனர். சில மணித்துளிகள் நீடித்த இந்த நில அதிர்வுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது.
அல்லாஹ்தாலாஹ்வின் அதிசயங்கள் நிகலும் போது அகப்பட்டுக்கொன்டோரின் மரனித்தோரின் பாவங்கள் பிழைகள் அனைத்தினையும் அந்த கிருபையுடையோன் மன்னித்து சுவர்க்கமெனும் பூங்காவில் சேர்த்துவைப்பானாக.............
ReplyDelete