Header Ads



"மக்களை ஒழுங்கான முறையில் வழிநடத்தவே, ஷரிஆ சட்டம் கடைபிடிக்கப்படுகிறது"

இந்தோனேசியாவின் அசே மாகாணத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தண்டனையாக பொது இடத்தில் வைத்து நூறு பிரம்படி வழங்கும் சட்டம் அமலுக்கு வந்தது. அத்துடன், இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர்க்கு நூறு மாத சிறை தண்டனையோ, அபராதமாக அரசுக்கு ஒரு கிலோ தங்கமோ வழங்க வேண்டி வரலாம் என்றும் சட்டம் உள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு இப்பகுதியில் பிரிவினைவாதிகள் போரை நிறுத்துவதற்காக அரசுடன் செய்துகொண்ட அமைதி ஒப்பந்தத்தில், இந்தோனேசியாவிலேயே முதல்முறையாக இஸ்லாமிய சட்டமான ஷரியாவை இங்கு நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதிலிருந்து, கள்ளத்தொடர்பு வைத்திருப்போருக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. இதேபோல, சூதாட்டம், மது அருந்துவது போன்றவற்றுக்கும், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வராதவர்கள் மற்றும் இறுக்கமான உடைகளை அணியும் பெண்களுக்கும் பொது இடத்தில் வைத்து சாட்டையடி தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நாட்டின், மத்திய அரசின் தலையீட்டால், கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்பவர்களை சாகும்வரை கல்லால் அடிக்கும் தண்டனை வழங்கப்படுவது சமீபத்தில் நிறுத்தப்பட்டது. இந்நாட்டின் மத்திய அரசு சட்டத்தைப் பொறுத்தவரை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றமில்லை.

ஆகவே, மனித உரிமைக் கழகம் அசே மாகாணத்தில் வழங்கப்பட்டு வரும் இத்தகைய தண்டனைகள் நாட்டின் சிறுபான்மையினரின் உரிமைகளை காக்கும் மத்திய அரசின் சட்டத்தை மீறுவதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது. எனினும், இந்தத் தண்டனைகள் மக்களை ஒழுங்கான முறையில் வழிநடத்தவே கடைபிடிக்கப்படுவதாக ஷரியாவின் தலைவர் சியாரிசால் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதியில் வசிக்கும் முஸ்லீம் அல்லாத ஒரு சதவிகித மக்கள், தங்களின் விருப்பப்படி இந்தோனேசியாவின் மத்திய அரசின் சட்டத்தையோ அல்லது அசே மாகாணத்தின் சட்டத்தையோ பின்பற்றும் உரிமையுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.