"நடுவில கொஞ்சம், பக்கத்தை காணோம்"
முதியோர் நல மருத்துவத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி பல சாதனைகள் புரிந்தவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன். இவரது சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ, பி.சி.ராய் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மறதி நோய் உள்ளவர்களுக்காகவே நினைவாற்றல் மையம் ஆரம்பித்து சிறப்புற நடத்தி வருகிறார். முதியோர் நல மருத்துவம் பற்றிய பல நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். முதியோர் நல மருத்துவத்தின் இப்போதைய வளர்ச்சி குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...
‘‘முன்பு எல்லா வயதினருக்குமே பொது மருத்துவரிடம்தான் காட்டுவார்கள். அந்நிலை மாறி முதியோர் நல மருத்துவரைத் தேடி வயதானவர்கள் வரும் அளவுக்கு இன்று முதியோர் நல மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு வளர்ந்துள்ளது. நம்நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை இருக்கும் அளவுக்கு முதியவர்களுக்கான மருத்துவர்கள் இல்லை என்பதே உண்மை. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றாலே பயப்படுவார்கள்.
இன்றைய மருத்துவ வளர்ச்சியில் 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கூட இதய அறுவை சிகிச்சை முதல் இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை வரை துரிதமாகச் செய்ய முடியும். நோய்களை கண்டறிவதிலும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால், ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்க முடிகிறது. முதியோர்களின் சிறுநீரகம் பழுதடைந்து விட்டால், வீட்டிலேயே டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொண்டு வாழ்நாளை நீடித்துக் கொள்ளலாம்.
பெரியவர்களுக்கு வரும் கேன்சர், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்றவற்றுக்கும் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. அதனால், முதியோர்கள் சரியான மருத்துவரிடம் சென்று தகுந்த கால இடைவேளையில் பரிசோதனை செய்து கொண்டாலே நலமாக வாழலாம். முதியோர் பலருக்குத் தகுந்த சிகிச்சையளித்து குணப்படுத்தி இருந்தாலும், ஒரு சம்பவம் பசுமையாக நினைவில் இருக்கிறது. திருத்தணி பழ வியாபாரி ஒருவர்... வயது 65 தாண்டினாலும் கடை வேலைகளை அவரே செய்யக்கூடிய திறனுள்ளவர்.
ஒரு நாள் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு தலையில் அடிபட்டிருக்கிறது. எக்ஸ்ரே பார்த்த அங்குள்ள டாக்டர்கள் ‘ஒரு பிரச்னையும் இல்லை’ என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகுதான், அவரது நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அடிக்கடி கோபப்பட ஆரம்பித்திருக்கிறார். முன்பு போல கடையையும் சரிவர கவனிக்க இயலவில்லை. பணத்தை சரியாக எண்ண முடிவதில்லை. சில நேரம் வாடிக்கையாளர்களிடம் அதிக பணத்தைக் கொடுத்து விடுவார். அதோடு, ‘நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம்’ என்பது போல மறதியினாலும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரை குடும்ப உறுப்பினர்கள் என்னிடம் கூட்டி வந்தார்கள்.
அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கச் சொன்னேன். ஸ்கேனில் சப்ட்யூரல் ஹெமட்டோமா (Subdural hematoma) எனும் கபாலத்துக்கும் மூளைக்கும் இடைப்பட்ட பகுதியில், வலது, இடது என இருபுறமும் ரத்தக்கட்டு இருந்தது தெரிந்தது. இரு பக்கமும் சமமாக ரத்தக்கட்டு இருந்ததால் மூளையை அழுத்தவில்லை. அதனால் பெரிய அளவில் அறிகுறிகளும் தெரியவில்லை. ஒருபக்கம் மட்டும் ரத்தக்கட்டு இருந்தால், இன்னொரு பக்கம் மூளையை அழுத்தி கை, கால் வாதத்தை உருவாக்கியிருக்கும்.
இந்த ரத்தக்கட்டை ஒரு சிரிஞ்ச் மூலம் எளிதாக அகற்றிவிடலாம். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளித்து சரி செய்தேன். விரைவிலேயே இயல்பான நிலைக்கு திரும்பிவிட்டார். இது எனக்கு மிகவும் திருப்தியளித்த சம்பவம்’’ என நினைவாற்றலுடன் சொல்கிறார் டாக்டர் நடராஜன்.

Post a Comment