மரணிக்கும் தருவாயில் திருமணம்..!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் நோயாக இன்று மருத்துவர்களையே மிரள வைக்கிறது கேன்சர். உடலின் எந்தப் பகுதியில் வரும்... எப்போதும் வரும் என்று யாராலும் கணிக்கமுடியாது.
சமீபத்தில் எமா கில்ஹிஸ்பி (Emma Gilhespy) என்ற 28 வயது பெண் நாக்கில் புற்றுநோய் வந்து இறந்துள்ளார். இறப்பதற்குப் பன்னிரெண்டு மணி நேரத்துக்கு முன்புதான் அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடந்தது என்பது இதில் மிகவும் சங்கடபடவைக்கும் செய்தி.
''ஒருநாள் வயிற்றில் வலி இருக்க, 'அல்சர் நோயாக' இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் எமா. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ''உங்களுக்கு அல்சர் இல்லை. ஆனால் கேன்சர் இருக்கு" என்று சொல்லியிருக்கின்றனர்.
தன் பாய் ஃப்ரெண்ட் மைக்கெலையும், ஐந்து வயது மகனையும் நினைத்து வேதனையில் ஆழ்ந்த எமா, சிகிச்சைக்காக முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்கு இரண்டு முறை அறுவைச் சிகிச்சை செய்யபட்டது. அதில் ஒருமுறை அவரின் நாக்கின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சையின் மூலம் எடுத்தனர். அந்தச் சிகிச்சைக்குப் பிறகு, எமா ஒரளவு குணமாகி சகஜ நிலைக்கு வந்துள்ளார். ஆனால், அந்தச் சந்தோஷம் அதிகக் காலம் நீடிக்கவில்லை. சிறுநீரகம், குடல், கழுத்துப் பகுதியில் புற்றுநோய் பரவி விட்டது.
திடீரென எமாவின் உடல் நிலை சரியில்லாமல் போக, மருத்துவர்கள் எமாவின் குடும்பத்தினரிடம் இன்னும் இரண்டு மூன்று நாட்கள்தான் அவர் உயிருடன் இருப்பார் எனச் சொல்ல, அதிர்ந்து போன எமாவின் பாய் ஃப்ரெண்ட் மைக்கெல் இனி, ஒவ்வொரு நாளும் எமாவுக்குப் பிடித்த நாளாக மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் முதல் கட்டமாக அவரைத் திருமணம் செய்திருக்கிறார்.
இது பற்றி எமாவின் கணவர் மைக்கெல், ''ஹிமாவுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. அவருக்கு எப்படி நாக்கில் புற்றுநோய் வந்தது என்றே தெரியவில்லை. நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன். அதனால், என்னால் குடும்பத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. எமா நோய்வாய்பட்டு இருந்தபோது கூட, குடும்பத்தையும் எங்கள் ஐந்து வயது குழந்தையையும் நன்றாகப் பார்த்து கொண்டாள். ஒருமுறை கூட அவள் வேதனையோடு இருந்து நான் பார்த்ததில்லை. அவளின் வாழ்நாள் கனவு என்னை கல்யாணம் செய்து கொண்டு தனியாக வீடு வாங்கி இன்னும் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான்.
அதனால்தான் சில மணி நேரத்தில் எமா இறந்துவிடுவாள் என்று டாக்டர்கள் கெடு கொடுத்தபோது அவளைத் திருமணம் செய்ய முடிவெடுத்தேன். இதை அவளிடம் சொன்னபோது வேண்டாம் என்று மறுத்து பிறகு ஒப்பு கொண்டாள். அவளுக்கு எனப் பிரத்யேகமான ஆடை வாங்கியிருந்தேன். ஆனால், அவளோ அந்த ஆடையை எடுத்து வையுங்கள். அந்த ஆடையுடன்தான் என்னைப் புதைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாள். சர்ச் வரை செல்ல முடியாததால் நண்பர்களைக் கூப்பிட்டு மருத்துவமனையிலேயே அவளை மணமுடித்தேன்.
அவள் கையில் மோதிரம் மாட்டும் போது ஒரு சிரிப்பு சிரித்தாள். அது போதும் எனக்கு. இப்போது அவள் ஆசைப்பட்ட படி எங்கள் மகனை நன்றாகப் படிக்க வைப்பேன். மகனை நல்ல நிலைக்குக் கொண்டு வந்துவிட்டு அவளைப் பார்க்க வருவதாக சொல்லியிருக்கிறேன்" என்று நெகிழ்ந்தார்.
இப்போது எமாவின் நண்பர்களும், உறவினர்களும், வாய் புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
- கு.அஸ்வின்

Post a Comment