17 மாவட்டங்களில், 10 லட்சம் மக்கள் பாதிப்பு - 17 பேர் பலி, 12 பேர் காணாமல் போயினர்
17 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அசாதாரண காலநிலையின் காரணமாக, 17 பேர் உயிரிழந்ததுடன், 12 பேர் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன் 9 லட்சத்து 89 ஆயிரத்து 214 பேர் இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 4 ஆயிரத்து 261 வீடுகள் சீரற்ற காலநிலையின் காரணமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் பதுளை - ரில்பொலயில் இடம்பெற்ற மண்சரிவை அடுத்து மேலும் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இந்த பிரதேசத்தில் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அதேநேரம் பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் குடும்பங்கள் வரையில் 400க்கும் அதிகமான இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையின் காரணமாக மலையகத்தின் பல பிரதேசங்களின் பாதைகளில் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன், நுவரெலியா, கினிகத்தேனை, தலவாக்கலை போன்ற பிரதேசங்களிலும், பதுளை கொழும்பு வீதியில் அல்தமுல்லை, பெரகலை - ஹப்புத்தளை மற்றும் கஹகல்ல போன்ற பிரசேங்களிலும் பாதைகள் கடும் பனி சூழ்ந்து காணப்படுகின்றன.
இதனால் இந்த பகுதியில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர ஏழாம் கட்டை பிரசேத்தில் இன்று பிரதேச வாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவை அடுத்து, சிறார் ஒருவரையும், மற்றுமொரு நபரையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்க அதிகாரிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சிலாபம் மற்றும் பங்கதெனிய பிரதேசங்களுக்கு இடையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில், இந்த பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்; கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் இது குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறார்.
.jpg)
Post a Comment