மத்யூஸின் குற்றச்சாட்டு..!
இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை இழந்ததற்கு துடுப்பாட்டக்காரர்களின் மோசமான ஆட்டம் தான் காரணமென இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றியடைந்திருந்த இந்திய அணி, 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தோல்வி பற்றி இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் கூறுகையில் ;
டில்ஷான், ஜெயவர்த்தனா தவிர மற்ற துடுப்பாட்டக்காரர்கள் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்த போட்டி வீரர்களின் செயற்பாடுகளை தெரிந்துகொள்ள ஒரு நல்ல பயிற்சிப் போட்டியாக அமைந்தது.
240 ஓட்டங்களை வைத்து இந்திய அணிக்கு பந்து வீசுவது என்பது பந்து வீச்சாளர்களுக்குச் சவாலான ஒரு விடயம். நாங்கள் ஒரே தவறை தான் மீண்டும் மீண்டும் செய்துள்ளோம். 300 க்கும் மேல் ஓட்டங்கள் எடுத்தால் தான் அந்த மண்ணில் இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். ஆனால் 3 போட்டிகளிலும் நாங்கள் சரியாக விளையாடவில்லை. சரியாக துடுப்பெடுத்தாடவில்லை.
மீதமுள்ள 2 போட்டிகளுக்கும் இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சங்ககார, தம்மிக பிரசாத், சுதாஜ் ரந்தீவ், உப்புல் தரங்க ஆகியவர்களுக்கு பதிலாக திரிமான, சந்திமல், ஷமிந்த எரங்கா, அஜந்த மெண்டீஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்னர் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment