புத்தளத்தில் பாடசாலை அதிபரை கடத்திச் சென்று எரித்துக் கொல்ல முயற்சி
புத்தளம் ஆனந்தா தேசிய பாடசாலை அதிபர் சுமணசிறி அமரசிங்க கடத்திச் செல்லப்பட்டு மோசமாகத் தாக்கப்பட்டதுடன் அவரை பெற்றோல் ஊற்றி எரித்துக் கொல்லவும் முயற்சிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த அதிபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் புத்தளம் அநுராதபுரம் வீதியின் 5 ஆம் கட்டை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிபர், வைத்தியசாலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தன்னை வான் ஒன்றில் வந்த நால்வர் கடத்தியதாகவும் வானில் வந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை செலுத்தி வர மற்றையவர்கள் வானுக்குள் வைத்து தன்னை கடுமையாகத் தாக்கியதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
200 மீற்றர் தூரம் சென்றதும் தன்னை வானிலிருந்து கீழே இறக்கி தன் மீது பெற்றோல் ஊற்றி எரிக்க முயற்சித்த போது தான் தப்பியோடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
வானில் இருந்தவர்கள் தன்னை இறக்கிவிட்ட இடத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றதாகவும் அதிகாலை ஒரு மணியளவில் வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் தெரிவித்தார்.
பாடசாலை இரும்புகளை விற்றார் என்ற குற்றச்சாட்டில் இவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment