அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவேண்டும்..? டிலான் பெரெரா
அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு கூட்டு பொறுப்பு உள்ளது. அந்தக் கூட்டுப் பொறுப்பை உணர்ந்து செயற்படவேண்டியது அமைச்சர்களின் பொறுப்பாகும். அவர்கள் கூட்டுப் பொறுப்பை உணர்ந்து செயற்படுவார்கள் என்று நம்புகின்றோம்.
கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டிலான் பெரெரா மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து முன்செல்லும் கூட்டணியாகும். இதில் பல கட்சிகள் பல கொள்கைகளுடன் உள்ளன. இந்தக் கூட்டணியில் வலுவான முறையில் ஜனநாயகம் உள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகள் என்ற வகையில் நாங்கள் .
பொதுவாக இணங்குகின்ற விடயங்களும் இணக்கப்பாடு இல்லாத விடயங்களும் உள்ளன. குறிப்பாக தேர்தல்கள் வரும்போது சில கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிடுகின்றன. பின்னர் இணைந்து செயற்படுவதுண்டு. காரணம் அனைத்து விடயங்களிலம் இணக்கப்பாடு இல்லாமையே இதற்கு காரணமாகும். கூட்டணி கட்சி என்றால் இவ்வாறு விடயங்கள் இருப்பது இயல்பானதாகும். சில காலத்துக்கு முன்னர் அமைச்சர் ஒருவர் ஐ.நா. அலுவலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்தார். அது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல. அந்தக் கட்சியின் தனிப்பட்ட தீர்மானமாகும்.
கேள்வி அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும்?
பதில் அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக நாங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவேண்டும்? அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு கூட்டு பொறுப்பு உள்ளது. அந்தக் கூட்டுப் பொறுப்பை உணர்ந்து செயற்படவேண்டியது அமைச்சர்களின் பொறுப்பாகும். அவர்கள் கூட்டுப் பொறுப்பை உணர்ந்து செயற்படுவார்கள் என்று நம்புகின்றோம். ஒருவேளை கூட்டுப் பொறுப்பை உணராமல் சில அமைச்சர்கள் செயற்பட்டால் ஏன் அவ்வாறு செயற்பட்டீர்கள் என்று நீங்கள் கேள்வியெழுப்பவேண்டும்.
எவ்வாறெனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இனவாதம் இல்லை. அங்கு முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதிநிதித்துவம் உள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் முஸ்லிம் முதலமைச்சரை எமது சுதந்திரக் கட்சியே உருவாக்கியது. அதேபோன்று சுதந்திரக் கட்சியின் சார்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் ஒருவரையும் உருவாக்கினோம்.
ஐக்கிய நாடுகள் சபையில் பல தலைவர்கள் பல மொழிகளில் பேசியிருக்கலாம். ஆனால் எமது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவே ஐக்கிய நாடுகள் சபையில் சிங்களம் தமிழ் மறறும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் உரையாற்றியவர் என்றார்.

Post a Comment