கொம்பன் யானைகள் பாதுகாப்பு வழங்க, நெல் மூடைகளை தூக்கிச் சென்ற யானைகள் - அம்பாறையில் ஆச்சரியம்
(Tn) ஒரு பகுதி நெல் வயல் பிரதேச அறுவடையில் கிடைத்த நெல்லை மூடைகளாக கட்டிவைத்து விட்டு அடுத்த பகுதி நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென வயல் பகுதிக்குள் பிரவேசித்த மூன்று யானைகள் நேராக நெல்மூடைகளிடம் வந்து கொம்பன் யானை காவல் காக்க ஏனைய இரு யானைகளும் நெல் மூடைகளை உண்டு மகிழ, இதைப் பார்த்த விவசாயிகள் கூக்குரல் இட ஆளுக்கு ஒரு மூடைகளாக தூக்கிச் சென்ற வியத்தகு நிகழ்வு கொக்குழுவ வயல் பகுதியில் நேற்று முன்தினமான திங்கட்கிழமை (10) பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த அதிசயிக்கத்தக்கதும் காட்டு யானைகளின் பிரவேசம் பற்றி நோக்குகையில், திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பகுதிகளின் எல்லை வயல் பகுதியான கொக்குழுவையில் தனது ஐந்து ஏக்கர் காணியில் நெல் அறுவடையை மேற்கொண்டுவிட்டு மதியம் உணவருந்தி கிடைக்கப் பெற்ற நெல்லை மூடைகளாக கட்டி அடுக்கி வைத்துள்ளார். இதில் 35 நெல் மூடைகள் இருந்தாக கூறப்பட்டது.
சுமார் இரண்டு மணியளவில் மீதமுள்ள நெல்வேளாண்மையை அறுவடைசெய்ய விவசாயிகள் சுமார் 12 பேர்களும் சென்று வயல் அறுவடையினை இயந்திரத்தின் மூலம் மேற்கொண்டுள்ளனர். சுமார் அரை மணித்தியாலம் சென்றிருக்கும் அடுக்கி வைத்த நெல் மூடைகளை உரிமையாளரான விவசாயி பார்த்து விட்டு அலறி அடித்து கூக்குரல் இட்டார். விவசாய அறுவடை இயந்திர சத்தத்தினால் இவரது கூக்குரல் ஏனைய விவசாய தொழிலாளிக்கு கேட்கவில்லை.
இந்த நிலையில் நெல் மூடைகளிடம் வந்த மூன்று யானைகளில் கொம்மன் யானை காவல்புரிய ஏனைய இரு யானைகளும் நெல் மூடைகளை சேதப்படுத்தி உண்டு பசியாறி உள்ளது. நெல் வயல் உரிமையாளர் ஏனையயோரின் துணையுடன் கூச்சலிட்டு யானைகளை விரட்ட இரண்டு யானைகள் இரண்டு மூடைநெல்லை தூக்கி சென்றது.
இதில் வியத்தகு சம்பவம் என்னவென்றால் கொம்மன் யானை ஒரு நெல் மணியைகூட உண்ணவும் இல்லை நெல் மூடைகளை சேதப்படுத்தவுமில்லை. ஒரு யானை முழுமையாக ஒருமூடை நெல்லை நெடுந்தூரம் தூக்கிச் சென்ற அதேநேரம் மற்றைய யானை கொண்டு சென்ற நெல் சுமார் அரை மைல் தூரத்திற்கு சிந்திய நிலையில் மீதமுள்ள சொற்ப நெல்லை போட்டுவிட்டு சென்றுள்ளது என நேரில் கண்ட விவசாய தொழிலாளர்கள் கூறினர்.
அறுவடை செய்யப்பட்ட 35 மூடைகளில் சுமார் 5 மூடைகள் முழுமையாக அழிக்கப்பட்டதுடன் ஏனைய 10 மூடைகள் பகுதி அளவில் யானையினால் சேதமாக்கப்பட்டதாக விவசாயி தெரிவித்தார்.

Post a Comment