முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை மேல் மாகாண சபைக்கு அனுப்புவது பொறுப்பாகும் - ஹக்கீம்
ஏனைய பல அரசியல் கட்சிகள் மாகாண சபை தேர்தல்களை பகிஷ்கரித்த சந்தர்ப்பங்களிலும், அத் தேர்தல்களில் போட்டியிட தயக்கம் காட்டி, பின்வாங்கிய சந்தர்ப்பங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்ப முதல் இன்று வரை போட்டியிட்டு வெற்றியீட்டி வருவதாக அக்கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொழும்பு-02 ஸ்டுவேர்ட் வீதியில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
மேல் மாகாண சபை தேர்தல் பிரசாரத்தை கொழும்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அர்ஷாத் நிஸாம்தீனின் அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்.
அமைச்சர் அங்கு உரையாற்றும்போது மேலும் தெரிவித்தவையாவன,
முதலாவது மாகாண சபைத் தேர்தல் 1988ஆம் ஆண்டு நடைபெற்ற பொழுது இன்றைய அரசாங்கத்தின் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அத்தேர்தலை பகிஷ்கரித்தது. ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியும் அதை பகிஷ்கரித்தது மட்டுமல்லாது அதில் போட்டியிடுவோருக்கு எதிராக பல விதமான தொல்லைகளை கொடுத்தது. விடுதலைப் புலிகளின் பாரிய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அத்தேர்தலில் களமிறங்கியது.
அன்று முதல் இன்று வரை நாம் எல்லாத் தேர்தல்களிலும் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறோம். சென்ற ஆண்டு நடைபெற்ற மத்திய, வடமேல், வட மாகாண சபை தேர்தல்களில் எல்லாக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் உறுப்பினர் எண்மரில் அரைவாசியினரான நால்வர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஷாத் நிஸாம்தீன் 2002ஆம் ஆண்டில் இருந்து எமது கட்சியினூடாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக இருந்து வந்தார். அவருக்கான மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் இருந்து மக்களுக்கு பல விதமான உதவிகளை வழங்கியதோடு இன்று ஏழு லட்சம் ரூபா செலவில் இப்பகுதியில் சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்காக சிறுவர் பூங்காவை என்னை அழைத்து வந்து திறந்து வைத்தார்.
கொம்பனித்தெரு பிரதேச மக்களின் வீட்டுப் பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்திருக்கின்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்காக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது மட்டுமல்லாது, அவர்களை அணிதிரட்டிக் கொண்டு நீதிமன்றப்படிகளிலும் ஏறி இறங்கினார்.
கொம்பனித்தெரு பிரதேசம் கல்வித்துறையில் முன்னேறுவதற்கு அவர் அளப்பரிய பங்களிப்பைச் செய்து வருகிறார். இப்பிரதேசத்திலுள்ள சாரிபுத், அல் அமீன், அல் இக்பால், ரீ.பி. ஜாயா போன்ற பாடசாலைகளின் வளர்ச்சியில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்து பாடுபட்டு வருகிறார். கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழ் வருவதால், வறிய மாணவர்கள் அதிகமாக கல்வி கற்கும் மேற்படி பாடசாலைகளின் வளர்ச்சிக்கு மாகாண சபையின் பங்களிப்பு முக்கியமானது, ஆகையால் அர்ஷாத் நிஸாம்தீன் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை மேல் மாகாண சபைக்கு அனுப்புவது உங்களது பொறுப்பாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாண சபைக்கு கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும், தென் மாகாண சபைக்கு மாத்தறை மாவட்டத்திலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது என்றார்.
இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், வேட்பாளர் அர்ஷாத் நிஸாம்தீன் ஆகியோரும் உரையாற்றினர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினரான அனஸ், நைசர் (வேட்பாளர்) ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Post a Comment