எந்தவொரு தீர்வும் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் - முன்னாள் அமைச்சர் மன்சூர்
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அதுபோன்ற அதிகாரங்களையே இலங்கையிலும் எதிர்பார்க்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவில் தெரிவித்துள்ள கருத்தை நாம் வரவேற்கும் அதேநேரத்தில் எந்த ஒரு தீர்வும் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் இடம்பெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் 'இலங்கையின் இன்றைய போக்கு' என்ற தலைப்பில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய மாநிலங்களுக்கு எத்தகைய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அதுபோன்ற அதிகாரத்தைத்தான் இலங்கையிலும் எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்திருந்தார்.
இரா.சம்மந்தனின் அதிகாரப்பகிர்வு சம்மந்தமான இந்த உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இக்கருத்துக்கு முன்னாள் அமைச்சர் மன்சூர் தனது கருத்தை தெரிவிக்கையிலேயே இப்படிக் கூறினார்.
அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது:-
தமிழ் தலைவர்கள் பொதுவாகப் பேசும்போது தமிழ் பேசும் மக்கள் என்று முஸ்லிம் சமூகத்தையும் இணைத்துப் பேசுகின்றார்கள் ஏதேனும் முடிவுகளை எடுக்கும்போது முஸ்லிம் சமூகத்தைப் புறக்கனித்தவர்களாக தமது முடிவுகளை எடுத்துவிடுகின்றார்கள்.அதனால்தான் எந்த ஒரு தீர்வும் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் எனக் கூறுகின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மூவின மக்கள் வாழும் கிழகிலங்கையைச் சேர்ந்தவர். இவர் இப்பிரதேச சமூகங்களின் அபிலாஷைகளை நன்கு புரிந்து கொண்டவர். முஸ்லிம் சமூகத்தின் நன்மதிப்பையும் அவர் பெற்றுள்ளார். அவரின் சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப்பகிர்வு சம்மந்தமான கோரிக்கைகள் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்காத வகையில் அமையும் என எதிர்பார்க்கின்றோம்.
வடக்குடன் கிழக்கு இணைய வேண்டும் என்பது கிழக்கு மக்களின் பூரண விருப்பத்துடனேயே அது நிறைவேற்றப்படல் வேண்டும். இதனைவிடுத்து வர்த்தமானி அறிவித்தல் மூலமாகவோ அல்லது அதிகாரக் கட்டளைகள் மூலமாகவோ நிறைவேற்ற முயற்சிக்கக்கூடாது.
அன்று எமது ஆட்சி காலத்தில் மங்கள முனசிங்க ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அக் குழுவில் மர்ஹும் ஏ.சி.எஸ். ஹமீதும் நானும் இருந்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமை கருதி பல முன்மோழிவுகளைக் கொண்டுவந்தோம். எங்களுடன் லக்க்ஷமன் ஜெயக்கொடி, மர்ஹும் எம். எச், எம் அஷ்ரப், பஷீர் சேகுதாவூத், போன்ற பலர் இருந்தனர். அவ் ஆணைக்குழுவில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது.அவைகள் பிரிந்திருக்க வேண்டும் ஆனல் இம் மாகாணங்களுக்கு இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும் என்ற முடிவை எடுத்தோம். இந்த முடிவை ஆணைக்குழு அன்று ஏற்றுக் கொண்டது.
ஆனால் யாழ்ப்பாண பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பிரதிநிதிகள்.இம்.முடிவை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துவிட்டார்கள்.அன்று தமிழர்களின் நலன் கருதி எவ்வளவு முயற்சி எடுத்து பாடுபட்டோம் அதிகாரங்களுடான மாகாணங்களைப் பிரிப்பதற்கு மறுத்தார்கள் ஆனால் இன்று என்ன நடந்திருக்கிறது .மாகாணங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதிகாரங்களும் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக வருந்துகின்றோம்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு சில தமிழ் தலைவர்கள் அதிகாரம் இருந்தபோது செயல்பட்டது போன்று முஸ்லிம்கள் மீது செயல்பட்டு விடக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம். வடக்கு மாகாணத்தை விட்டு கிழக்கு மாகாணம் பிரிந்திருந்தால் முஸ்லிகளின் விகிதாசாரம் 43 சத வீதமாக இருக்கும் இரண்டு மாகாணங்களும் இணைந்திருந்தால் முஸ்லிம்களின் விகிதாசாரம் 17 சத வீதமாக மாறிவிடும்.இ வடக்கும் கிழக்கும் இணையும்போது முஸ்லிம்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக ஆக்கப்படுகின்றார்கள். அடிமையாக்கப்படுகின்ற சந்தர்ப்பமும் ஏற்பட்டு விடும். எது எப்படியிருந்தாலும் ஒரு சமூகம் மற்ற சமூகத்தைப் புரிந்து கொண்டு பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும். முஸ்லிம்களை அணைத்துச் செல்லக் கூடிய வழி வகைகளை தமிழ் தலைவர்கள் தேடிக் கொள்ள வேண்டும். அவர்களுடன் சேர்ந்து செல்வதற்கு முஸ்லிம் சமூகம் எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால்இ சிறுபான்மையினராக இருந்து அடிமைகளாக ஆக்கிவிடப்படக் கூடாது என்றே முஸ்லிம் சமூகம் அச்சப்படுகின்றது.
தற்போதய அரசாங்கத்தினால் ஒரே நாடு ஒரே தேசம் என்று சொல்லப்படுகின்றது. பல்லின மக்கள் வாழும் எமது இந்த நாட்டில் இந்தியா பிரிட்டன் போன்ற பல்லின மக்கள் வாழும் நாடுகளில் உள்ள சிறப்பான சூழல் எமது நாட்டில் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகின்றோம்.
கடந்தகால ஆட்சியாளர்கள் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பிரதேசங்களுக்குச் சென்றால் ஆங்கிலத்தில் உரையாடினார்கள். இன்று எல்லாமே சிங்களத்தில் நடைபெறுகின்றது. இப்படியாக இருந்தால் எப்படி ஒரே நாடு ஒரே தேசம் என்று கூற முடியும்?
பல இனம் பல மதம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் கொண்டதாக வாழும் எமது இந்நாட்டில் சகல இன மக்களும் கெளரவத்துடன் வாழக்கூடிய நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

மிகவும் நல்ல கருத்தாக முன்னால் அமைச்சர் மன்சூரின் விடயம் உள்ளது.கசப்பான பல உண்மைகள் இருந்தாலும் அதனை கட்சி வேறுபாடின்றி ஏற்றுக்கொண்டே தீரனும்.தனிச்சிங்கள சட்டமே நாட்டில் இனத்துவேசத்தை உண்டுபன்னியது என்பதை எந்த சிறுபாண்மை மக்களும் ஏற்றுக்கொள்ள தவரமாட்டார்கள்,அதுவே இன்று திரு மன்சூர் சொன்னதுபோன்று,வட கிழக்கில் உரையாடலாகவும் நடக்கிறது.
ReplyDeleteஅமைச்சர் மன்சூர்,இப்போது எங்கே என்ன செய்கிறார் என்ற தகவலை யாரும் இங்கு சொல்ல முடியுமா?இவர் ஏன் மீன்டும் அரசியலுக்கு வர நினைக்க வில்லை?வயது போய் விட்டதா?இப்படியான அனுபவம் கொண்ட நல்லவர்கள் இருதி வரை மக்களோடு இருக்க வேண்டும் என்றே விரும்பிகிறேன்.