இமாம் இப்னு சஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவ ஆர்வம் - ரவூப் ஹக்கீம்
வார இறுதியில் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கு புனித மக்கா சென்றிருந்த நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், ரியாத் நகரில் அமைந்துள்ள மிக பிரசித்தி வாய்ந்த பல்கலைகழகம் ஒன்றுக்கும் சென்றிருந்தார். அமைச்சருடன் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமதும் அங்கு சென்றிருந்தார்.
அதுபற்றி அமைச்சர் ஹக்கீம் கூறியதாவது,
இமாம் இப்னு சஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த, 1,25,000 ஆயிரம் மாணவர்களைக் கொண்ட மிகப்பெரியதொரு பல்கலைக்கழகமாகும். அந்தப் பல்லைக்கழகத்தில் விடுதிகளில் தங்கி உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை 25,000 ஆகும். அப்பல்லைக்கழகத்தில் மருத்துவ பீடம், பொறியியல் பீடம் என்பன உட்பட வேறு பீடங்களும் உள்ளன.
அப்பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாறு, விஞ்ஞானத்துறை ஆகியவற்றிற்கு பொறுப்பான பீடாதிபதியையும், ஏனைய பேராசிரியர் சிலரையும் சந்தித்து கலந்துரையாடினோம். அந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. விஞ்ஞானத்தை பொறுத்தவரை இப்னுசீனா போன்ற இஸ்லாமிய மருத்துவ மேதைகள் நிகழ்த்திய ஆய்வுகள், அவர்கள் எழுதிய ஆக்கங்கள் என்பன அங்கு பேணி பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அந்த சுவடிக்கூடத்தை சென்று பார்வையிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. மேற்குலகுக்கு விஞ்ஞானத்தை அறிமுகப்படுத்திய இஸ்லாமியப் பேரறிஞர்கள், ஆசான்கள் பற்றிய பல்வேறுபட்ட சான்றுகளை அங்கு நாங்கள் கண்டோம்.
அந்தப் பல்கலைகழகத்தின் ஒரு கடல் கடந்த வளாகத்தை இலங்கையில் நிறுவுவதிலும் அவர்கள் பெரிதும் ஆர்வமாக இருக்கின்றார்கள். அதுபற்றி உயர்கல்வி அமைச்சரை சந்தித்து உரிய ஏற்பாடுகளை செய்வதாக அவர்களிடம் கூறியிருக்கின்றேன்.
டாக்டர் ஏ.ஆ.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்

.jpg)
Post a Comment