முஸ்லிம்களிடையே குடும்ப சூழலில், சிறுவர் பராமரிப்பு மிக மோசமாக காணப்படுகிறது' - வைத்திய நிபுணர் நிலாம்
(இக்பால் அலி)
அன்று குடும்ப சூழலில் காணப்பட்ட சிறுவர் பராமரிப்பு முறை இன்றைய சூழலில் காணப்பட வில்லை. இதன் காரணமாக குடும்ப வாழ்வியல் சூழலில் சிறுவர் பராமரிப்புறை பலவீனமடைந்துள்ளதனால் சிறுவர்கள் ஒழுக்க விழுமியங்களிலிருந்து நெறி தவறிச் செல்கின்றனர். இதற்கு பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் சுத்தமென நியாயம் பாராட்டிக் கொண்டிருப்பதன் மூலமே ஏற்படுகின்றது என்று குருநாகல் போதனா வைத்தியசாலையின் தலசீமியா நோய்பிரிவின் சிறுவர் வைத்திய நிபுணர் ஜே. எம். நிலாம் தெரிவித்தார்.
குருநாகல் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பறகஹதெனிய தேசிய பாடசாலையில் தலசீமியா நோய் தொடர்பாக பெற்றோர்களுக்கு விளமளிக்கும் விசேட விழிப்பூட்டல் செயலமர்வு பாடசாலை மண்டபத்தில் அதிபர் ஐ. அப்துர் ரஹ்மான தலைமையில் இன்று 17-02-2014 நடைபெற்றது. இந்நிகழ்வில் விசேட வளவாளராகக் கலந்து கொண்ட சிறுவர் வைத்திய நிபுணர் ஜே. எம். நிலாம் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
இரண்டு மூன்று வயதுப் பிள்ளைகள் செய்யும் காரியங்களை எமது பெற்றோர்கள் சுதந்திரமாகச் செய்விட்டு பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இது குழந்தை வளர்ப்புக்கு ஆரோக்கியமான செயற்பாடல்ல, அந்தப் பிள்ளைகளுக்கு எந்தவிதமான நுண்ணறிவோ எதிர்மறையான விடயங்களை அறிந்து கொள்கின்ற மனப்பக்குவமோ கிடையாது. அவர்களுடைய சிறு தவறைக் கண்டால் நாம் கண்டிக்க வேண்டும். இன்று பெற்றோர்கள் அவ்வாறு இல்லை. இது சிறு குழந்தைகள் செய்யும் குறும்பனத்தனங்கள் என விட்டுவிடுகின்றோம். நாங்கள் தவறெனக் கண்டும் காணாது அக் குழந்தைகளின் பாட்டுக்கு சும்மா விட்டு விடுகின்றோம். நாம் தவறு இழைக்க முற்படும் அக் குழந்தையை உடனே கண்டிப்பதுடன் அது தொடர்பாக நியாயமான விளக்கங்களை அக்குழந்தைக்குப் புகட்ட வேண்டும். அப்போதுதான் அந்தச் சிறு குழந்தை சிந்திக்க முற்படுகின்றது. இல்லையெனில் சிறு பராயத்தில் எவ்வகையான காரியங்களைச் செய்ததோ அதனையோ தம்முடைய 12 13 வயதிகளிலும் செய்ய முற்படுகின்றது. அடுத்தவர்களுடைய புத்தகங்களை ஒழிப்பதும், கிழிப்பதும் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் இறங்குகின்றனர்.
எனவே பெற்றோர்கள் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
இன்று எங்களுடைய முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் குடும்ப சூழலில் சிறுவர் பராமரிப்பு முறை மிக மோசமானதாகக் காணப்படுகின்றது. சிறுவர்கள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுகின்ற பழக்கவழக்கம் இருந்து கொண்டிருக்கிறது. இது எங்களுடைய சமூக முன்னேற்றத்திற்கு பெரும் ஆபத்தான செயற்பாடாகும். அர்த்தமில்லாமல் கையடக்கத் தொலைபேசியை பிள்ளைகளின் பாவனைக்காக வாங்கிக் கொடுக்கின்றார்கள். இது பிள்ளைகளின் எதிhகாலத்திற்கு உவப்பானதல்ல இதனால் ஏற்படக் கூடிய நன்மை தீமை பற்றி பிள்ளைகளிடம் விளக்கி அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
பாடசாலை தம் பிள்ளை போய் வருவதாயின் பெற்றோர்கள் அவர்களுடைய பையில் என்ன பொருள்கள் இருக்கின்றன என்று தினசரி ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். கூடுதலாக வேலைச் சுமையை சுருக்கிக் கொண்டு பிள்ளைகளின் பக்கம் கவனம் செலுத்துவது அவசியமாகும்.


Post a Comment