சாத்தான் வழிபாட்டுக்காக 22 படுகொலைகள்..!
அமெரிக்காவின் பென்சில்வேனியா பெண் ஒருவர் தான் தனது கணவருடன் சேர்ந்து குறைந்தது 22 பேரை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஏற்கனவே கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் 19 வயதான மிரண்டா பார்பர் என்ற பெண் சிறையிலிருந்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மிரண்டா மற்றும் அவரது கணவரான எலிட் பார்பர் ஆகியோர் இணையதளத்தின் ஊடே நட்பான லாபெர்ராரா என்பவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மிரண்டா தனது பத்திரிகை பேட்டியில், கடந்த ஆறு ஆண்டுகளில் அமெரிக்காவெங்கும் பல கொலைகளை செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு சாத்தான் வழிபாட்டுக்காகவே இந்த கொலைகளை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அலஸ்காவில் வைத்து தனது 13 ஆவது வயதில் இந்த கொலைகளை செய்ய ஆரம்பித்து பின்னர் வடக்கு கரோலினாவுக்கு வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
19 வயது பெண்ணின் இந்த பேட்டி குறித்து தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ள பொலிஸார், இது குறித்து எப். பி. ஐ. மற்றும் ஏனைய மாநில பொலிஸாரையும் தொடர்புகொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஜோடி வடக்கு, கரோலினாவில் திருமணம் முடித்து கொலை செய்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னரே இடம்பெயர்ந்துள்ளது.
இந்த ஜோடி இணையதளத்தின் ஊடே பண உதவிகள் வழங்குவது குறித்து சிறு விளம்பரம் ஒன்றை இட்டு அதனூடே லாபர்ராரே என்பவருடன் நட்புக் கொண்டு அவரை கொலை செய்துள்ளனர். இதில் குறித்த நபருடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கும் இந்த ஜோடி பின்னர் 20 தடவைகள் மேற்படி 42 வயது நபரை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர்.
பிரதிவாதிகள் மீது மரணதண்டனை விதிக்குமாறு அரச தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் மிரண்டா மற்றும் அவரது 22 வயது கணவர் பார்பரின் வழக்கறிஞர்கள், இவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்கள் என்று வாதிடுகின்றனர்
இதில் இருவரும் ஒன்றிணைந்து கொலை ஒன்றை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த கொலையை செய்ததாக மிரண்டா பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையிலேயே சன்பர்ரி என்ற பத்திரிகைக்கு மிரண்டா பேட்டி அளித்து மேலும் 22 கொலைகள் பற்றி கூறியிருக்கிறார். "இந்த அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று உணர்கின்றேன். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்கு கவலை இல்லை. நான் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும்" என்று மிரண்டா தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்த கொலைகளுக்கு தாம் பச்சாத்தாபம் அடையவில்லை என்றும் கெட்டவர்களையே தாம் கொன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று தாம் பங்கேற்ற அலஸ்கா, டெக்ஸாஸ், வடக்கு கரோலினா மற்றும் கலிபோர்னியா மாநிலங்களில் மேற்கொண்ட கொலைகள் பற்றிய விபரத்தை அளிக்கவும் அவர் முன்வந்துள்ளார்.

Post a Comment