அரபுக் கல்லூரிக்கு, மட்டக்களப்பு கல்லூரி என பெயர் சூட்டுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கிறது
தனியார் அரபுக் கல்லூரிக்கு மட்டக்களப்பு கல்லூரி என பெயர் சூட்ட எனப் பெயர் வைப்பதற்கு எம்மால் அனுமதிக்க முடியாது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என மட்டக்களப்ப மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மகிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் நாட்டில் 25 பல்கலைக்கழகக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக 2012க்கான வரவு செலவுத் திட்டத்தின் போது பாராளுமன்றத்தில் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டது. அதில் 5 பல்கலைக்கழகக் கல்லூரிகள் தனியார் அமைப்புக்களுக்கு வழங்குவதாகவும் மீதியாக உள்ள 20 பல்கலைக்கழகக் கல்லூரிகள் மாவட்டம் தோறும் ஏற்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறான ஜனாதிபதியின் திட்டம் இருக்கும் போது, எமது மாவட்டத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் வெளிநாட்டு நிதியினைக் கொண்டு அரபு மொழியினைப் போதிக்கும் தனியார் பல்கலைக்கழகக் கல்லூரியினை அரசாங்கத்திடம் கொள்வனவு செய்து, அதனை மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதனையில் கட்டி அதற்கு மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி எனப் பெயர் வைப்பதற்கு எம்மால் அனுமதிக்க முடியாது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
இவர்கள் இந்த தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு அரபுப் பெயரையோ அல்லது எந்தப் பெயரையோ வைக்கலாம் அதற்கு நாங்கள் தடையல்ல ஆனால் இவர்கள் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி என்று பெயர் வைக்க முடியாது.
இதனை நாங்கள் அமைச்சர் அவர்களிடம் தெரிவிக்க உள்ளேன். இந்த நடவடிக்கையினை பார்க்கின்ற போது இவர்கள் மட்டக்களப்ப மாவட்டத்துக்கு அரச பல்கலைக்கழகக் கல்லூரி வருவதற்கு தடை விதிக்கப்போகின்றாரா என எண்ணத் தோன்றுகின்றது.
மகிந்த சிந்தனைத் திட்டத்தின் செயல்பாடுகளில் ஒன்று அது உயர்தர மாணவர்களுக்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் பாடநெறியாகும்.
இந்த பாடநெறியினை பயிலும் உயர்தர மாணவர்கள் 2016ல் பல்கலைக்கழக அனுமதி போக மீதியாக உள்ள மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு விண்ணப்பித்து தங்கள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டு இலகுவாக கூடிய வேதனத்துடன் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளுதலும், இவர்கள் வேலைவாய்ப்புக்காக அரசாங்கத்தினை நம்பியிருக்க கூடாது, என்பதே ஜனாதிபதியின் திட்டமாகும்.
அப்படியிருக்கும் போது இக் கல்வியினை பயிலும் மட்டக்களப்பு தமிழ் முஸ்லிம் மாணவர்கள் இவர்களின் தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு பணம் கொடுத்து படிக்க வாருங்கள் என்பதற்கான கவர்ச்சிக்காக மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி எனப் பெயர் வைக்க மக்களின் பிரதிநிதியான எம்மால் அனுமதிக்க முடியாது.
கடந்த 30 வருட யுத்தம் காலமாக எமது மாவட்ட தமிழ், முஸ்லிம் இளைஞர்,யுவதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு கடந்த காலத்தில் பொருத்தமான கல்வியோ மற்றும் வேலைவாய்ப்போ வழங்கப்படவில்லை. இதனால் வேலையற்றோர் கூடுதலாக உள்ள மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இலவசமாக மூன்றாம் நிலைக் கல்வியினை வழங்கும் நடவடிக்கையினையே மேற்கொள்ள வேண்டும்.
யுத்தம் ஓய்ந்த பிற்பாடு இன்னும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில் எமது மாவட்டம் வறுமையில் முதலிடத்தில் தக்கவைத்துள்ள நிலையில், பணம் கறக்கும் செயல்பாட்டில் தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு எவ்வாறு மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி எனப் பெயர் வைக்க முடியும்?.
மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளோமா பாடநெறி இலவசமாக நடாத்தப்படுவதுடன் கஸ்ரப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபா உதவு தொகையினை அரசாங்கம் வழங்குகின்றது. அப்படியிருக்கும் போது இதே டிப்ளோமா பாடநெறிக்கு இவர்களின் தனியார் பல்கலைக்கழகக் கல்லூரி ரூபா 230,000 கட்டணத்தில் விண்ணப்பம் கோரியுள்ள விளம்பரத்தினை பார்த்தேன்.
முடியுமானால் எமது மாவட்டத்துக்கு ஒரு அரச பல்கலைக்கழகக் கல்லூரியினை ஏற்படுத்துங்கள் அல்லது தொழிநுட்பவியல் கல்லூரியினை ஏற்படுத்துங்கள் நாங்கள் வரவேற்போம் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கைகொடுக்கும் அப்போது நாம் அதற்கு மட்டக்களப்பு எனும் பெயரை சூட்டலாம்.
அதுவே எமது தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கு செய்யும் கைங்கரியமாகும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.jpg)
வரவேற்கத்தக்கது.
ReplyDelete