Header Ads



அரசாங்கத்துடன் போட்டி போடக்கூடிய தகுதியான ஒருவரும் எதிர்க்கட்சிகளில் இல்லை

(Vi) மேல் மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் இம்முறை மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொள்ளும். அரசாங்கத்துடன் போட்டி போடக்கூடிய தகுதியான ஒருவரும் எதிர்க்கட்சிகளில் இல்லை என்பது வருத்தமளிக்கின்றது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

மேலும் மக்களின் விருப்பம் என்ன வென்பது எப்போதோ தெரிந்த விடயம். இம்முறை மாகாண சபை தேர்தல் பிரிவினை சக்திகளுக்கு  நல்லதொரு பாடமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார். 

மேல் மாகாணசபைத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் இறுதி நாளில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இம்முறை மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றுக் கொள்ளும். அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் ஆதரிக்கும் வகையிலேயே மக்களின் அனைத்துச் செயற்பாடுகளும் உள்ளது. எனவே இப்போது மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றுவிட்டது. 

அதே போல் இம்முறைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகளில் எந்தவொரு வேட்பாளரும் இல்லாமையானது வருத்தமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. மக்களால்தெரியாத, பார்க்கப்படாத முகங்களையே ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் போட்டிக் களத்தில் இறங்கியுள்ளது. எனவே இப்போதே எமது வெற்றி உறுதியாகி விட்டது. 

மேலும் நாட்டில் பிரிவினைவாதத்தினை தூண்டி மக்களை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வைத்து நாட்டில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்பதே பல எதிர்க்கட்சிகளின் செயற்பாடாகும். எனினும் அது இவர்கள் எவராலும் முடியாது. பகல் கனவு காண்போரின் நிலைமை இம்முறை மாகாண சபைத் தேர்தலுடன் மாற்றமடையும். இம்முறை மேல் மற்றும் தென் மாகாண சபை அரசாங்கத்தின் மிகப் பெரிய வெற்றியுடன் பிரிவினைவாதிகள் தகுந்த பாடத்தினை கற்றுக் கொள்வார்கள். மக்களே இவர்களுக்கு தகுந்த பாடத்தினை கற்றுக் கொடுப்பார்கள். 

நாட்டில் மக்கள் அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை  பலப்படுத்த செய்தமையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாரிய பங்கு உள்ளது. தனது பிரிவினைவாத செயற்பாடுகளை நாட்டில் பரப்பி மக்களின் ஆதரவினை முழுமையாக இழந்து விட்டனர். அதனை இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக உணர்ந்து கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.