ஜனாதிபதி விசாரணைக் குழுவை நியமிக்க கோரும் மனுவில் கையொப்பமிட முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்
(மிஸ்காத்)
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கான பிரஜைகள் குழு இணைத் தலைவர் யாழவன் நஸீர் மக்களுக்கு அழைப்பு. ஜனாதிபதி விசாரணைக் குழு நியமனம் கோரும் மனுவில் கையொப்பம் இடுமாறு வட மாகாண முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்.
1990ல் மிகக் கொடூரமான முறையில் மனித உரிமையை குழிதோண்டி புதைத்து, இனச்சுத்திகரிப்பு செய்து 81 ஆயிரத்துக்கு மேற்பட்ட வட மாகாண முஸ்லிம்களுடைய அசையும் அசையா சொத்துக்களைப் பறித்து தாயக மண்ணில் இருந்து அடித்துத் துரத்திய நிகழ்வை ஜெனீவா மாநாடு சரி என ஏற்றுக் கொள்கிறதா? என யாழவன் நஸீர் கேள்வி எழுப்பியுள்ளார் அதுமட்டுமன்றி இலங்கை அரசு இது தொடர்பில் ஏன் மௌனம் சாதிக்கிறது என்ற கேள்வியையும் கேட்டுள்ளார்.
சர்வதேச சமூகத்தில் நம்பிக்கை இழந்து போன வட மாகாண முஸ்லிம்கள் இலங்கை ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து ஜனாதிபதி விசாரணைக் குழு மூலம் தமக்கு விமோசனம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். கடந்த கால அரசுகள் வட மாகாண முஸ்லிம்களது உரிமை விடயத்தில் அக்கறை கொண்டிருக்கவில்லை.
புலிகள் வட மாகாண முஸ்லிம்களது அனாதரவாக அடித்துத் துரத்தியதனால் பல விளைவுகளை இன்று வரையும் அனுபவித்து வருகின்றனர். சூனியமான எதிர்கால பின்னடைவிலிருந்து இம் மக்களை பாதுகாப்பதற்கு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கான பிரஜைகள் குழு 1994ம் ஆண்டிலிருந்து ஜனாதிபதி விசாரனைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்துள்ளது. கடந்த கால அரசுகள் பராமுகமாக இருந்ததன் கரணமாக யாழவன் நஸீர் தலமையில் புத்தளத்திலும் கல்பிட்டியிலும் கொழும்பிலும் ஆர்ப்பாட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
தற்போது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும், முஸ்லிம் சமய சமூக நிறுவனங்களுக்கும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கான பிரஜைகள் குழு பொது வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறது.
ஜனாதிபதி விசாரனைக் குழு நியமிக்கப்படவில்லையாயின் வடமாகாண முஸ்லிம்களின் எதிர்காலம் கவலைக்கிடமான நிலைமையை நோக்கிச் செல்லவுள்ளது. அது மட்டுமின்றி வடக்கில் வடமாகாண முஸ்லிம்களது மீள் குடியேற்றம் செத்து மடிந்து போன கதையாகி விடும். இன்னும் 3 வருடங்களில் முஸ்லிம் கலாசார விழுமியங்கள் சீரழிந்து போகும் நிலை உருவாகும். இதைத் தடுத்து நிறுத்தி மீளெழுச்சி கொண்ட தாயக முஸ்லிம் பிரதேசத்தை வடக்கில் கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஜனாதிபதி விசாரனைக் குழுவின் சிபாரிசு ஒன்றால்தான் முடியும். இறுதிக்கட்ட ஜனநாயக போராட்டம் ஒன்றை செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இப்போரட்டம் வலுப்பெற்று வடமாகாண முஸ்லிம்களுக்கு விடியல் பெற வேண்டுமாயின் அனைவரும் ஒன்றினைந்து ஒரே குரலில் ஜனாதிபதி விசாரணைக் குழுவை நியமிக்க கோருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறது. தற்போது ஜனாதிபதி விசாரணைக் குழு கோரி பத்தாயிரம் வட மாகாண முஸ்லிம்களது கையொப்பம் இடப்பட்ட மகஜர் ஒன்றை மாண்புமிகு ஜனாதிபதியிடம் கையளிக்க பிரஜைகள் குழு ஏற்பாடு செய்கிறது. சகல வடமாகாண முஸ்லிம்களும் ஜனாதிபதி விசாரணைக் குழு நியமனக் கோரிக்கை மனுவில் கையொப்பம் இடுமாறு அன்பாக கேற்கப்பட்டுள்ளனர். சமூக நலனுக்காக சிறை வாசம் சென்றேனும் ஜனாதிபதி விசாரணைக் குழுவை கோரி நிற்போம். என பிரஜைகள் குழு இணைத் தலைவர் யாழவன் நஸீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment