Header Ads



'முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள் என்றால் அவர்களிடத்தில் முறையான கல்வி போய்ச்சேரவில்லை என்பதேயாகும்'

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

உலகலாவிய ரீதியில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முஸ்லிம்கள் இன்று முகம்கொடுத்து வருகிறார்கலென்றால் அவர்களிடத்தில் முறையான கல்வி போய்ச்சேரவில்லை என்பதேயாகும் என சிங்கப்பூர்  சமூக இலக்கிய நற்சேவையாளரும் புதிய நிலா இதழாசிரியருமான மு.ஜஹாங்கீர் தெரிவித்தார்.

முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண தரத்தில் ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றவர்களை பாராட்டி பணப்பரிசில் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வு முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்க தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அஹம்மட் முனவ்வர் தலைமையில் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்த வெளியரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஏ.எம்.இஷாக் கலந்து கொண்டதுடன் விசேட பேச்சாரளராக டொக்டர் எஸ்.எப்.எல்.அக்பர் உட்பட பலர் முக்கிய  பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண தரத்தில் 2013ம் ஆண்டு சகல பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற்ற 198 மாணவ, மாணவியர்கள் பாராட்டி பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு விசேட அதிதி மு.ஜாஹாங்கீர் மேலும்  உரையாற்றுகையில்,

கல்வி இல்லை என்றால் எதுவும் செய்யமுடியாத நிலையே இன்று காணப்படுகிறது. கல்வி மிகவும் முக்கியமானது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த நவீன யுகத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். கற்றால் மாத்திரம் பொருள் ஈட்டலாம் என்ற சிந்தனையை நாம் கொண்டிருக்கின்றோம். அது மிகவும் தவறானது. கல்வி கற்றிருப்பது எமக்கு மிகவும் பலம். அந்த கல்வி பொருள் ஈட்டுவதற்காக என்று  கற்றுக்கொள்வது மிகவும் பலயீனமான ஒன்று. இன்று நடைபெறும் தீய நடவடிக்கைகளுக்கு இவ்வாறான நோக்கத்தோடு கல்வியை நாம் கற்றதேயாகும். உலகலாவிய முஸ்லிம்கள்  பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவது இஸ்லாத்திற்கு ஏற்ற முறையிலான கல்வி எம்மிடத்தில் கிடைக்காமையேயாகும்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளிடத்தில் மிகவும் அன்பு வைக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்களை அரவணைத்து நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுக்க முன்வரவேண்டும் பெற்றோர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, பெரியவர்களிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவது என்பவற்றை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

அவ்வாறில்லாமல் அவர்களை படி, படி என்று பந்தயக்குதிரை போன்று நடத்தக்கூடாது. இஸ்லாம் மார்க்கம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு மார்க்கம். எமது குழந்தைகளுக்கு கல்வி புகட்டத்தான் வேண்டும் அந்தக் கல்வி இஸ்லாம் மார்க்கம் சொல்லிக்காட்டுகின்ற அடிப்படையில் அமையவேண்டும். அதுவே எமக்கு பலமான கல்வியை தரும்.

ஒரு சிறந்த குடிமகனாகவும் நாட்டுக்கு வளம் சேர்க்கக்கூடியவனாகவும் மாற்றக்கூடிய கல்வி முறையையே இஸ்லாம் காட்டித்தந்திருக்கின்றது.

ஒரு காலத்தில் நாம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு விளங்கவைத்தோம். இன்று அப்படியல்ல யாருக்கு நாம் முன்னர் கல்வியை புகட்டினோமோ அவர்களிடத்திலிருந்தே இன்று நாம்  பலவிடயங்களை அறிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

குழந்தைகளுக்கு ஒன்றை நாம் சொல்லிக் கொடுக்கும் முன் அவர்களை ஏதோ ஒருவகையில் முதலில் பாராட்ட வேண்டும். அந்த பண்பு வரவேண்டும். அதன் பின்னர்தான் அவர்களுக்கு பாடங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்;கள் ஆர்வத்துடன் கல்வியை கற்றுக்கொள்ள முன்வருவார்கள். எமது குழந்தைகளை வேவொரு குழந்தையுடன் ஒப்பிட்டுக்கூறி கல்வியை கற்றுக்கொடுக்கக்கூடாது அவர் அதிலே நல்ல புள்ளியெடுத்திருக்கிறார் இதிலே நல்ல புள்ளியெடுக்கிறார் என்பதை கூறாது தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் ஒரு தனிமனிதனின் முன்னேற்றத்தில் இருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது. எமது குழந்தைகளை நாட்டை நேசிக்கக்கூடியவர்களாகவும் நாட்டுக்கு வளம்சேர்க்கும் குழந்தைகளாக வளர்க்க  முன்வரவேண்டும்.

இன்றைய மாணவ, மாணவிகள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் நான் சொல்வேன். கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்னர் கல்வி கற்கக்கூடிய இவ்வாறான வசதிவாய்ப்புகள் இருக்கவில்லை இன்று மாணவர்களுக்கு சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.  

முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் எதிர்கால மாணவ சமூதாயத்தினை நல்ல ஒரு குடிமகனாகவும் பிரஜையாகவும் முன்னேற்றுவதற்கு இவ்வாறான ஊக்குவிப்புக்களை வழங்கி அவர்களை பாராட்டுவது மிகவும் வரவேற்கத்தக்கது. இதை அனைவரும் பாராட்ட வேண்டும். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

No comments

Powered by Blogger.